பிழைப்பு தேடி பெற்றோர் வெளியூர் சென்று விடுவதால், மேட்டூர்
கிராமங்களில், குழந்தைகள் தனியாக வாழ்க்கை நடத்தும் அவலம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரத்தில்
கோல்நாயக்கன்பட்டி, பொறையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாய
தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கரும்பு
வெட்டுதல், மரம் வெட்டும் வேலைக்காக, குடும்பத்துடன் வெளியூர் சென்று தங்கி
விடுகின்றனர். தொடர்ந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை வெளியூர்களில்
முகாமிட்டு வேலை செய்கின்றனர். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பெற்றோர்,
குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர், வயதான பெற்றோர் பராமரிப்பில்
விட்டுச் செல்கின்றனர். வெளியூர் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின்
குழந்தைகள் தனியாகவும், மற்றவர்கள் பராமரிப்பில் இருந்து, பள்ளிக்கு சென்று
படிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உறவினர் ஆதரவின்றி தனியாக சமைத்து,
சாப்பிட்டு பள்ளிக்கும் செல்லும் அவலமும் நடக்கிறது.
பொறையூரை சேர்ந்த
செந்தில் மகள் தவசியம்மாள் (10), நந்தினி (8). தவசியம்மாள், பொறையூர் அரசு
பள்ளியில், 5ம் வகுப்பும், நந்தினி, 3ம் வகுப்பும் படிக்கின்றனர்.
இவர்களின் பெற்றோர் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று, பல மாதங்கள் அங்கேயே
தங்குவதால், குழந்தைகள் இருவரும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக
வசிக்கின்றனர். உறவினர்கள் அருகில் இருந்த போதிலும், அவசர உதவி மட்டும் செய்கின்றனர்.
தவசியம்மாள்
கூறியதாவது: என் பெற்றோர், பெரும்பாலான மாதங்களில் வெளியூரிலேயே தங்கி
விடுகின்றனர். நாங்கள் படிக்க வேண்டும் என்பதால், கிராமத்திலேயே விட்டுச்
சென்றுள்ளனர். நான் சிறு வயதிலேயே சமையல் செய்ய கற்று கொண்டேன். காலையில்
சமையல் செய்து, தங்கையையும் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வேன்.
மதியம் பள்ளியில் சாப்பிடுவோம். மாலை வீட்டுக்கு வந்ததும் துணிகளை துவைத்து
விடுவோம். காலையில் சமைத்த சாப்பாடு மீதம் இருந்தால், இரவில்
சாப்பிடுவோம். இல்லாவிட்டால், மீண்டும் சமையல் செய்து சாப்பிடுவோம். தங்கை
உடன் இருப்பதால், ஆறுதலாக உள்ளது. இரவு படுக்கும்போது பெற்றோர் நினைவு
வரும். அப்போது, அழுதவாறு அப்படியே தூங்கி விடுவேன் என்றார்.
கோல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பல குடும்பங்கள் கரும்பு வெட்டும்
வேலைக்காக வெளியூர்களுக்கு சென்று விடுவதால், தவசியம்மாள், நந்தினி போல
ஏராளமான குழந்தைகள் பெற்றோர் அரவணைப்பின்றி வயதான பாட்டி வீட்டிலும்,
உறவினர்கள் வீட்டிலும் வசிக்கின்றனர். குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே, பெரிய
மனுஷிகள் போல் மாறி, தங்கள் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து வாழ வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment