இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால் கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. வளர் இளம் பருவத்தில் உள்ள 10,11,12-ம் வகுப்பு மாணவர்களே அதிகம் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்ற முதன்மை கல்வி அதிகாரியை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன.
பாடப்புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், செல்போன்களை ஒழித்து வைத்திருக்கின்றனர் மாணவ, மாணவியர்கள். இதைக் கேள்விப்பட்டவுடன் நமது இளைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
தடுமாறும் இளைய தலைமுறை: மாணவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சினிமாவும், தொலைக்காட்சியும் ஏற்படுத்தி வரும் கலாச்சால சீர்கேடு தவிர தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் கையில் தவழும் செல்போன், தெருவுக்கு தெரு பரவலாக இருக்கும் இண்டர்நெட் சென்டர்கள் மாணவர்களின் மனதை அலைபாயச் செய்கின்றன.
பள்ளி மாணவிகளின் பைகளில் இருந்த காதல் கடிதங்கள்தான் சற்று யோசிக்கச் செய்கிறது. மாணவிகளுக்கு எதனால் இந்த தடுமாற்றம்?. இன்றைய கல்வி முறை எப்படிப்பட்டது?, மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை மட்டுமா ஆசியர்கள் தயார் செய்கின்றனர்?, பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மட்டும் நடத்தி விட்டு போதனை எதுவும் தராமல் விட்டுவிடுகின்றனரா?, பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றிய பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு காற்றோடு போய்விட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இரண்டு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையிலேயே அதிக அளவிலான ஆபாச புத்தகங்களும், காதல் கடிதங்களும் சிக்கியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்தால் என்னென்ன சிக்குமோ? எத்தனை சமூக விரோதிகள் மாணவர்களை குற்றச்செயல்களுக்கு தூதுவர்களாக பயன்படுத்துகின்றனரோ என்ற ஐயம் தோன்றுகின்றது.
புகையும், மதுவும்: இதற்கிடையே, இன்றைய தலைமுறையினர் ஏராளமானோர் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 12 வயது முதல் 16 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் அதிக அளவில் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக அந்த ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் 3ஆயிரத்து 956 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சினிமாவை பார்த்தே புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளனர். 162 பேர் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் புகைப் பிடிப்பதை பார்த்து இதனை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள்தான் அதிகளவில் சினிமாக்களை பார்த்து கெட்டுப்போய் உள்ளனர். புகையிலை பயன்பாடு குறித்த மற்ற விளம்பரங்கள் மாணவர்களை அதிகமாக கவரவில்லை. விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மிகவும் குறைவுதான்.
பெற்றோர்களின் கண்காணிப்பு: உலகம் முழுவதும் புகையிலைக்கு எதிரான பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்களை கவர்ந்த சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தினால், அது பயனுள்ளதாக இருக்கும். சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
புகையிலையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி குறும்படங்கள் தயாரித்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் திரையிடலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment