தனித் தெலுங்கானா அமைக்கக் கோரி, ஆந்திராவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்திற்கு வரும் மத்திய தொகுப்பு மின்சார அளவு குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு கூடுதல் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி, பல வகைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், ஐதராபாத் அருகிலுள்ள சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தினமும் எடுக்கப்படும், 1.20 லட்சம் டன் நிலக்கரிக்குப் பதிலாக, 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால், அருகிலுள்ள அனல்மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கரீம் நகர் மாவட்டத்தில், தேசிய அனல்மின் கழகத்திற்குச் சொந்தமான, ராமகுண்டம் அனல்மின் நிலையம், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில், 2,600 மெகாவாட் திறன் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏழு யூனிட்கள் இயங்குகின்றன.
இங்கிருந்து, மத்திய அரசின் தொகுப்பாக, தமிழகத்திற்கு, 659 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ராமகுண்டம் அனல்மின் நிலையத்தில், சில யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலைமையைச் சமாளிக்க, ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி பெற்று, மீண்டும் அனைத்து யூனிட்களும் இயக்கப்படுகின்றன. ஆனாலும், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்திற்கு, 659 மெகாவாட் ஒதுக்கீட்டில், 400 மெகாவாட் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் குறைவான மின்சாரமே கிடைத்தது.
இதுகுறித்து, தமிழக மின் துறை அதிகாரி கூறும்போது,"சுரங்கத் தொழிலாளர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதால், ராமகுண்டம் மின் நிலையப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது.இதுவரை, அங்கிருந்து மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்திருப்பதால், அதை வைத்து நிலைமையைச் சமாளித்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.
No comments:
Post a Comment