யூனிடெக் நிறுவனத்துடன் சேர்ந்து நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான டெலிநார் 2ஜி உரிமத்தை பெற்றது. ஆனால் ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 2ஜி உரிமங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 2ஜி உரிமம் வழங்குவதில் பிரதமர் மன்மோகன்சிங் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்று டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தஸ்தாவேஜூக்கள் அடிப்படையில் இந்த மனுவை டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது சிறப்பு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் 2ஜி உரிமம் வழங்குவதில் பிரதமருக்கும், ப.சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு என்று டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே யூனிநாரிலிருந்து வெளியேற வேண்டுமானால் 15 கோடி டாலர் (சுமார் ரூ.750 கோடி) கொடுக்க வேண்டும் என்று டெலிநார் நிறுவனத்திடம் யூனிடெக் கோரிக்கை விடுத்துள்ளது.நார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டம் யூனிநார் ஆகும். இந்த கூட்டு நிறுவனம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த யூனிடெக், இந்த கூட்டுத் திட்டத்தில் 32.7 விழுக்காடு பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. நார்வே நிறுவனம் 67.25 விழுக்காடு பங்குகளைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2009ஆம் ஆண்டில் இந்த பங்குகளை வாங்கியது.
No comments:
Post a Comment