தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவர் சேதுலட்சுமியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3ம் மைலில் அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள காமராஜ்நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (50). கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி சேதுலட்சுமி (48). இவர், தூத்துக்குடி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், தனது வீட்டையொட்டி கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே மருத்துவர்கள். மகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாராம்.
தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி நித்யா (24). 6 மாத கர்ப்பிணியாக இருந்த நித்யா, மருத்துவர் சேதுலட்சுமியின் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்று வந்தாராம். கடந்த 30ம் தேதி நித்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாம். அவரை சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதித்ததில், வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது தெரியவந்ததால், அறுவைச் சிகிச்சை செய்து இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்போது நித்யாவின் உடல்நிலை மோசமானதால், அவரை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர் சேதுலட்சுமி அனுப்பிவைத்தாராம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் நித்யா இறந்தார். இது தொடர்பாக, நித்யாவின் கணவர் மகேஷ் அன்றைய தினமே மருத்துவர் சேதுலட்சுமியிடம் தகராறு செய்தாராம். இந்நிலையில், கடந்த 02.01.2012 அன்று இரவு 10.30 மணியளவில் மருத்துவர் சேதுலட்சுமி தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் மற்றும் 3 பேர் அரிவாள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் கிளினிக்கில் நுழைந்து அவரை வெட்டினராம். இதில் சேதுலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர் வள்ளி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜெ. ராஜேந்திரன், தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. சோனல் சந்த்ரா, கூடுதல் கண்காணிப்பாளர் சாமிதுரைவேலு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்படும் மகேஷின் நண்பர்களான தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் குருமுத்து (19), ஆவுடையார்புரத்தை சேர்ந்த நீலசந்திரன் மகன் ராஜா (27), இஸ்மாயில் மகன் அப்பாஸ் (27) ஆகிய மூவரையும் சில மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர். மகேஷ் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கைது செய்யப்பட்டார். "ஆட்டோ டிரைவரான மகேஷ் தன் மனைவி மற்றும் குழந்தை இறந்ததற்கு டாக்டர் சேதுலட்சுமிதான் காரணம் எனக் கருதி இந்தக் கொலையைச் செய்துள்ளார். அவர் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கும், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளன. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது' என மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கூறினார். இந்த சம்பவத்தில் இன்று ஆறுமுகம் மற்றும் வெற்றிவேல் என்ற மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 ஆட்டோக்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment