|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

திமுகவினரின் வெள்ளையாக்கப்படும் கருப்பு பணம்!

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய அமைச்சராவதற்கு, கனிமொழி சிபாரிசு செய்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதேபோல், நிதித் துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரை சிபாரிசு செய்தவர், தி.மு.க., தலைவரின் மற்றொரு மகளான செல்வி. இவர் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன், அவருக்கு நிதித் துறை பொறுப்பு பெற்றுத் தரப்பட்டது.இவர் ஒரு வழக்கறிஞர் என்றாலும், தகுதியின் அடிப்படையில், அவருக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேனி பெல்ஸ் சாலையில், இவர் மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இவரை வைத்து, தி.மு.க.,வினர் எப்படி எல்லாம் பயன் அடைந்துள்ளனர் என்பது, மிகவும் சுவராசியமான தகவல்.

வருமான வரித் துறையை, பணம் சம்பாதிப்பதற்காக, இவர் பயன்படுத்திக் கொண்டார். இவரின் உத்தரவு படி, சில இடங்களில் சோதனை நடத்தப்படும். மேலும், வேறு சில இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இவரது உத்தரவு படி, திடீரென நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தினால், வருமானவரித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம். காரணம், மந்திரியின் வாய்மொழி உத்தரவு மூலம் தான், சோதனைகள் நிறுத்தப்படுகின்றன.

சோதனை நடத்துவதற்கான வாரண்ட், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. சோதனை நடத்தச் செல்லும் இடம், நபர் பற்றிய விவரங்கள் அனைத்தும் முன் கூட்டியே காண்காணிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட பின்னரே, சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.அப்படி இருக்கும்போது, அமைச்சரிடம் இருந்து வரும் போனின் மூலம், சோதனையை எப்படி நிறுத்த முடியும்? ஆனாலும், ஓய்வு பெற்றதற்கு பின், தமிழகம், கேரளாவில் வங்கி தீர்ப்பாயம் போன்ற முக்கிய பதவி வேண்டும் என்ற ஆசையில், அதிகாரிகள் பலிகடா ஆகி விடுகின்றனர்.

தி.மு.க., தலைவருக்கு பின்னரோ அல்லது காங்கிரசுடனான, தி.மு.க.,உறவு முறிந்து விட்டாலோ, வருமான வரித் துறை, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கருதி, தி.மு.க.,வினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாருக்குமே சந்தேகம் ஏற்படாத வகையில், எந்த வழியிலாவது, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பணத்தை கொண்டு வருவது மற்றும் வரித் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதன்மூலம், நிதித் துறை, விஞ்ஞானப்பூர்வமாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் பதவிக் காலத்தின்போது, அவரது மகன் திருமணத்தை நடத்தினார். திருமணத்துக்கு முன், கட்சியில் உள்ள தன் விசுவாசிகளுக்கு, பல லட்ச ரூபாய்களை விநியோகம் செய்தார். பணத்தை கொடுத்த கையோடு, திருமணத்தின்போது, இந்த பணத்தை, டி.டி.,யாகவோ, பரிசு காசோலையாகவோ, திரும்பச் செலுத்தும்படியும், அவர்களிடம் அறிவுறுத்தினார். வருமான வரித் துறை விசாரணையில் இருந்து, தப்பிக்கும் நோக்கத்துடன் தான் அவர் இப்படிச் செய்தார்.

தொழில் கல்வி நிலையங்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள், பல கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறு மாறும்போது, பணமும் கை மாறுகிறது. அறக்கட்டளை கைமாறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, அதுபற்றி தகவல், வருமான வரித் துறையினருக்கு தெரியாமல் இருக்காது.
அதேபோல், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், வரி தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயத்தின் மூலம், அதிக பணம் கிடைத்ததாக, முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கணக்கில் கொண்டு வருவது தான் அவரது திட்டம். முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம், பெரும்பாலான தி.மு.க.,வினர், இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை, பினாமிகள் மூலமாகவோ, சொந்தமாகவோ நடத்தி வருகின்றனர். 

ஆனால், என்ன செய்வது?அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதிகாரிகளின் குழந்தைகளின் கல்வி, மிகவும் முக்கியமானது. கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், விரும்பத் தகாத, தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதை அதிகாரிகள் விரும்புவது இல்லை.ரூபாய் ஏழு அல்து எட்டு விலையுள்ள வாரப் பத்திரிகைக்கு, 15 ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதன்மூலம், விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி, பணத்தை கணக்கில் கொண்டு வருகின்றனர். சரி... இலவச பொருட்களையாவது விலை கொடுத்து வாங்கினார்களா என்றால் அதுவும இல்லை. மிரட்டல் நடவடிக்கைகள் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து, இலவசங்கள் பெறப்பட்டன.

இதே நிறுவனத்தால் நடத்தப்படும் நாளிதழ், அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது. இதன் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தையும், முறைகேடாக சம்பாதித்த பணத்தையும், கணக்கில் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, நாளிதழின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகள் என்றால், விலையை குறைத்து விற்பதால், பல லட்சம் பிரதிகள் விற்பனையாவதாக கூறி, பெருமளவு பணத்தை, தினமும் கணக்கில் காட்டுகின்றனர்.

திரைப்பட தயாரிப்பு விவகாரத்திலும், தி.மு.க.,குடும்பத்தினர் இதே வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும், திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து, அவற்றை வெளியிடுவதற்காக, பெரிய அளவில் தியேட்டர்கள் முன் கூட்டியே, "புக்' செய்யப்படுகின்றன. பெரிய அளவு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தான் இவைகள் செய்யப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு, "கால்ஷீட்' கொடுக்காத நடிகர், நடிகைகளின் வீடுகளில், அமைச்சரின் உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையை அழிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நோக்கம் இல்லை... ஆனால், இவர்களில் செயல்களால் அது தான் நடந்தது . இதனால் கொந்தளித்த, சினிமா துறையினர் அனைவரும், தி.மு.க., படு தோல்வி அடைய காரணமாக இருந்தனர். "எந்திரன்' திரைப்படம் தயாரிப்பு மற்றும் வெளியீடு விவகாரத்திலும் இது தான் நடந்தது. இதன்மூலம், அவர்களின் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்பட்டது.

இதுபோன்ற நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், விமான நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வதோ, வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதோ, அவர்களுக்கு எளிதாகி விடுகிறது.இவர்களின் கட்சியை சேர்ந்தவரே, நிதித் துறை இணை பொறுப்பு வகிக்கும்போது, இவர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க முடியும். கட்சிக்காகவும், கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் தான், அவர் வேலை பார்க்கிறார். இதற்காக, அரசின் பணம், அவருக்கு சம்பளமாகவும் கிடைக்கிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் பதவி வகித்து வருகிறார். இந்த கால கட்டத்தில், அமைச்சகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? அவரின் பங்கு என்ன? குறிப்பிட்ட, "டிவி' குழுமம் தான், இதனால் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது."சன் டிவி' செயல் இயக்குனர் மீது சேலத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசில் மோசடி புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை யாருமே இந்த குடும்பத்தினர் செயல்களை எதிர்த்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. காரணம், போலீஸ் இயந்திரம் முழுவதும் இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.வருமானவரித்துறையில் நேர்மையான, மனச்சாட்சிக்கு பயந்த அதிகாரிகள் உள்ளனர். நடக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமைச்சர் பதவி இழந்தாலோ, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி முறிந்தாலோ, இழந்த கவுரவத்தை மீட்கவும், துன்புறுத்திய மந்திரியை பழிவாங்கவும், வருமானவரித்துறைக்கு அதிக வேலை வந்து விடும்.இவ்வாறு, வருமானத்துறையில் உள்ள, பல நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...