நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் குழந்தைகளை ஒரு வித வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. சென்னை, கோவை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் தமிழகத்தில் இயல்பாக 430 மிமீ மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிய 2 வாரங்களிலேயே 210 மிமீ வரை மழை பெய்துள்ளது.
ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால் இம்மாவட்டங்களில் அணை, குளங்கள் நிரம்பவில்லை. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் பனி பெய்வதுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பெரும்பாலும் இக்காய்ச்சல் குழந்தைகளையே பாதிக்கிறது. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் பரவி விடுகிறது. மேலும் இக்காய்ச்சல் 4 நாள் முதல் 5 நாள் வரை நீடிக்கிறது. சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால் அடிக்கடி பள்ளி செல்லும் குழந்தைகள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. காய்ச்சல் பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
No comments:
Post a Comment