அதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்
என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்
பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில்
அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு
சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர்.
சிலர், "வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற
எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை
தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள், உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில்
வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை
வாழலாம்' என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில
லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை
எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும்
வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, "டூரிஸ்ட் விசா' எடுக்கப்படுகிறது. இது,
அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட
வேண்டும். இந்நிலையில், "டூரிஸ்ட் விசா' மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும்
அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் "ஓவர் ஸ்டே' என்ற வகையில் அந்நாட்டு
போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும்
நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப
முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு
திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும்
இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான
சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால்,
அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட
வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால்
அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை
உத்தரவாதமாக இருக்கும்.
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து
குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா
மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா
விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு
கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு)
சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற
அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு
எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள்
என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத்
தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள்
சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது
என்ற தகவலும் கொடுக்கப்பட வேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும்
நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம்
முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட
வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு
உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல்,
இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று
விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்,
வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது' என்றார்.
வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு,
சென்னையில் தமிழக அரசின் சார்பில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன்
லிமிடெட்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல
ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா,
சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம்,
பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில்
உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி,
தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ்
மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100
சதவீதம் பாதுகாப்பு உண்டு.
இது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு
வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை
பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று
எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி
வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம்
செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின்
மூலம் செல்வோர், "எம்ப்ளாய்மென்ட் விசா' உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும்
பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல்
ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல்
18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம்
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்'
என்றார்.
No comments:
Post a Comment