வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால், அதற்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே மற்றும் தைவான் நாடுகள் உரிமை கோரி வருகின்றன. இவற்றில், சீனா தென் சீனக் கடல் முழுமையும் தனக்குரியது என வாதாடி வருகிறது.இந்நிலையில், இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம் குறித்து நேற்று, "க்ளோபல் டைம்ஸ்' மற்றும் "சீனா டெய்லி' ஆகிய சீன பத்திரிகைகள் இந்தியாவுக்குக் கடும் மிரட்டல் விடுத்துள்ளன.
தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்' என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன.
இதுகுறித்து அவற்றில் கூறியிருப்பதாவது:சீனா- வியட்நாம் இடையே, கடந்த 11ம் தேதி கடல்சார் பிரச்னைகள் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுநாள், வியட்நாம் இந்தியாவுடன் எண்ணெய் துரப்பண ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது வியட்நாமின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது.வியட்நாமோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், வியட்நாம் பிராந்தியத்தில் தனது அரசியல் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தியா கருதுகிறது.இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இதற்கு சீனா சம்மதிக்கக் கூடாது. இன்று சீனா சும்மா இருந்தால், நாளை பல நாடுகள் தென் சீன கடலுக்குள் நுழையும்.தென் சீன கடலில் நுழைந்து மீன்பிடிப்பதன் மூலம், சீனா உடனான பல பிரச்னைகளில் பேரம் படிய வைக்கலாம் என இந்தியா நினைக்கிறது.வெறும் வாய் வார்த்தைகளால் மட்டும் சீனா மறுப்பு தெரிவிக்காமல், இந்திய, வியட்நாம் பணியைத் தடுக்க என்ன வகையில் எல்லாம் இடையூறு செய்ய முடியுமோ, அந்த வகையில் செய்ய வேண்டும்.இவ்வாறு சீன பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment