|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2011

80 ஆயிரம் கோடி செலவிட்டும் பலனில்லை: வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !


நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.

நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்."நகர் புறங்களில் மாதம் 965 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் கிராம புறங்களில் மாதம் 781 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக கருதக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தெரிவித்திருந்தது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலில் உறுப்பினராகவும், திட்டக்கமிஷனர் செயலராகவும் உள்ள என்.சி.சக்சேனா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சக்சேனா கூறியதாவது: ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் வருவாய் என்றால், ஒரு நாளைய வருவாய் 32 ரூபாய் என்ற கணக்கு வருகிறது. இந்த 32 ரூபாயை வைத்து ஒரு குடும்பம் நடத்த முடியுமா? இந்த வருவாய் உள்ளவர்களை ஏழையாக கருதக்கூடாது என, சுப்ரீம் கோர்ட்டிடம் திட்டக்கமிஷன் கேட்கிறது. இந்த பிரச்னை திட்டக்கமிஷன் கூட்டத்தில் புயலை கிளப்பியது.நம்நாடு சுதந்திரமடைந்த போது 32 கோடி பேர், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது. 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்பட்டனர். தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது. பொது பங்கீட்டு முறையில் நிறைய குளறுபடிகள் உள்ளன.

வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.நம்மைவிட பின்தங்கிய நிலையில் உள்ள வியட்நாம், மியான்மர், பூடான் நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளின் மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலனில்லை.வறுமையில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பின் போது மக்கள் தவறான தகவல்களை தெரிவிப்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த சரியான விவரம் கிடைப்பதில்லை. எனவே, புதிய அணுகுமுறையை பின்பற்றும்படி கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் தெரிவித்துள்ளேன். ஏழைகள் குறித்த சரியான கணக்கெடுப்பின் மூலம் தான் நலத் திட்ட உதவிகள் உரியமுறையில் சென்றடைய முடியும்.இவ்வாறு சக்சேனா கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...