கடைசியாக நீங்கள் ஏறிய பஸ்சின் எண் என்ன? நேற்று அணிந்திருந்த சட்டையின்
நிறம் என்ன? எப்போது சூரியனை கடைசியாகப் பார்த்தீர்கள்? கடந்த ஆண்டு எந்த
நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடினீர்கள்? இந்த கேள்விகளுக்கு, நம்மால்
ஞாபகத்தோடு பதில் சொல்ல முடியும். ஆனால், ஒரே சமயத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு, உடனடியாக பதில்
சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த கலைக்கு, "கவனகம்' என்று பெயர்.
தமிழர்களின் மரபு சார்ந்த இந்தக் கலை, கவனகர்கள் குறைந்து வருவதால் அழிந்து
வருகிறது.
சென்னையைச் சேர்ந்த இளைஞர் கலைச் செழியன், அழிந்து வரும் இந்தக் கலையை
மீட்டெடுத்து, பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சித்து
வருகிறார்.பலரின் கேள்விகளுக்கு, உடனடியாகப் பதில் சொல்வதற்கு வடமொழியில்,
"அவதானம்' என்று பெயர். எட்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால், அஷ்ட அவதானம்,
பத்துக்கு தசாவதானம், நூறுக்கு சதாவதானம். இந்த, "அவதான'த்தை
தனித்தமிழில், "கவனகம்' என்று பெயர் மாற்றி, புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்
ராமையா பிள்ளை.
தற்போது, தமிழகத்தில் அருகி வரும் இந்தக் கலையை, சென்னை வாலிபர் கலைச்
செழியன் சிறப்பாகப் பொது மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார். எட்டாம்
வகுப்பு படிக்கும் போது, தந்தையோடு தமிழ்ச் சான்றோர் பேரவை விழாவிற்குச்
சென்றிருந்த கலைச் செழியன், அங்கு நடந்த கவனக நிகழ்ச்சியைப் பார்த்து,
தானும் அது போல நிகழ்ச்சியைச் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்து,
அன்றிரவே வீட்டில் உள்ளவர்களை கேள்வி கேட்க வைத்து, பதில் சொல்லி
இருக்கிறார். அன்று ஆரம்பித்த ஆர்வம் இன்று, "எழுபதில் கவனகம்' வரை கொண்டு
சென்றிருக்கிறது.
தனித் தமிழில் கவனகம்:ஆந்திரா, கர்நாடகா, டில்லி, இலங்கை, தாய்லாந்து,
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில், கவனக நிகழ்ச்சி நடத்தியிருக்கும்
கலைச் செழியன், தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கவனகத்தை
வெறும் அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மொழியுணர்வு ஊட்டக்
கூடிய அவையாக மாற்ற வேண்டும் என்பது, கலைச் செழியனின் எண்ணம்.அதனால்,
தமிழகத்தில் தனித் தமிழில் நிகழ்ச்சியை நடத்தி வருகிற இவர், மொழி புரியாத
வெளிநாடுகளில், ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடத்துவதை, வழக்கமாகக்
கொண்டிருக்கிறார்.
படைப்பாற்றல் அவசியம் :""கவனகக்கலையை நடத்துவதற்கு, நினைவாற்றல் மட்டும்
போதாது; படைப்பாற்றலும் வேண்டும். அவையோர் திடீரென வெண்பா, கட்டளை
களித்துறை என, பல்வேறு இலக்கணங்களில் பாடல் வடிக்கச் சொல்வார்கள். நாம்
அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.இதற்கு, வெறும் நினைவாற்றல் மட்டும்
இருந்தால் போதாது.கூடவே படைப்பாற்றலும் இருக்க வேண்டும். அப்போது தான்,
கவனகத்தில் நிலைத்து நிற்க முடியும். கவனமாய் கற்றால் கவனகக் கலையும்
எளிதுதான்'' என்பது கலைச் செழியனின் அனுபவ மொழி.
நினைவாற்றலில் மனப்புரட்சி:பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படித்துக்
கொண்டிருக்கும் போது, இவர் எழுதிய "நினைவாற்றலில் மனப்புரட்சி' என்ற
நூலுக்கு, தமிழக அரசின், "குறள் பீடம்' விருது கிடைத்திருக்கிறது.தனக்குப்
பின்னால் கவனகக்கலை நிகழ்த்துவோரின் எண்ணிக்கை, அதிகரிக்க வேண்டும் என்கிற
நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கலைச் செழியன். அதனால், தமிழகம்
முழுக்க உள்ள பள்ளிக்குச் சென்று, கவனகக் கலையை பரப்பி வருகிறார்.""
பள்ளிகளில் கவனகத்தைப் பாடமாக வைத்தால், பிற்காலத்தில் அவர்களுக்கு
மிகப்பெரிய பலமாக இருக்கும். அது பாடம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், பொது
வாழ்க்கைக்கு பயன்படும் வகையிலும் அமையும்'' என்றார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கவனகக் கலையை
நிகழ்த்தியிருக்கும், கலைச் செழியன், தற்போது பெண் காவலர்களுக்கு, கவனகப்
பயிற்சி கொடுத்து வருகிறார்.
No comments:
Post a Comment