|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா!

நில அபகரிப்பில் போலீசார் உள்பட யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை, மது விலக்கு, ஆயத்தீர்வை, உள்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக இந்தத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்த அரசு பதவி ஏற்றவுடன் பொதுமக்களிடையே சட்டம்- ஒழுங்கு பராமரிப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், கடந்த காலத்தில் சமூக விரோதிகளின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நிலவி வந்த பய உணர்வை போக்கும் விதத்திலும் நடந்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனிமனித உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வந்த சமூக விரோதிகள் தப்பிக்க இடம் கொடுக்காமல் இரும்பு கரம் கொண்டு அடக்கிட இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆட்களை கடத்தி பணம் பறித்தல், மணல் கொள்ளை, அத்தியாவசிய பொருட்களை கடத்துதல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் 323 பேர் மீது குண்டர் சட்டத்திலும், 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறமையும், ஆற்றாலும் தமிழக காவல் துறையின் பணி தரத்தின் தனி அடையாளங்களாக திகழ்கின்றன. ஆனாலும், காவல் பணியில் மேலும் சில மாற்றங்களும், சீர் திருத்தங்களும் தேவை என்பதில் சந்தேக மில்லை. எனவே திட்டமிட்ட மற்றும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விவாதத்தில் பேசிய பென்னாகரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நஞ்சப்பன், கடந்த திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் மீது போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. அடியாட்களாகவே காவல்துறையில் சிலர் நடந்து கொண்டார்கள். என் மீதே பல்வேறு வழக்குகள் போட்டார்கள். அதிலிருந்து விடுதலையாகி விட்டேன். ஒரே ஒரு வழக்குதான் உள்ளது. அதுவும் கூட பொய் வழக்கு தான்.

முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க. ஆட்சியில் பல பொய் வழக்கு போடப்பட்டதாக உறுப்பினர் நஞ்சப்பன் கூறினார். அந்த வழக்கின் விவரங்களை கொடுத்தால், பொய் வழக்கு என்றால் திரும்ப பெறப்படும்.

மேலும் நில அபகரிப்பில் போலீசார் சிலர் ஈடுபட்டதாகவும் கூறினார். நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் போலீசார் விதி விலக்கு அல்ல. ஏற்கனவே தவறு செய்த போலீஸார் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் நல்லவர்களும் உள்ளனர். குற்றம் புரிந்தவர்களும் உள்ளனர். எனவே, நில அபகரிப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் தயங்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

அதே நேரத்தில் உறுப்பினர் நஞ்சப்பன் பேசும்போது, போலீசை பிடிபிடியென விளாசித் தள்ளினார். இடையில் போலீசாருக்குப் பரிந்து கோரிக்கைகளையும் வைக்கிறார். இதில் எதை எடுத்து கொள்வது என்று புரியவில்லை. பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும். பாலபாரதி இவ்வாறு கூறியதும் முதல்வர் உள்பட அனைவரும் சிரித்தனர்,

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...