|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

அடுத்தாண்டு முதல் ரயில்களில் மேட்ச், சீரியல் பார்க்கலாம்!

நீண்டதூர ரயில்களில் டிவி சேனல்களை ஒளிபரப்ப இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.சொகுசு பஸ்கள், கார்கள் மற்றும் வாகனங்களில் டிவிக்கள் பொருத்தப்பட்டு உடனுக்கு உடன் செய்திகள், சினிமா, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இந்த வசதியை ரயில்களிலும் கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டு அதற்கான பணி்களில் இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் நீண்டதூர ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ்சில் டிவி பொருத்தப்பட உள்ளது. இதற்கான இணைப்பை வழங்க இந்தியாவின் முன்னணி டி.டி.எச். நிறுவனங்களான டிஸ் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி உள்ளிட்டவை முன் வந்துள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ரயில்களில் டிவி சேனல்களை ஒளிபரப்பு முதலில் டெல்லியில் இருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம் ரயில் பயணத்தின் போது செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு சம்பந்தப்பட்ட 70 சேனல்களை பயணிகள் கண்டு களிக்கலாம். உடன் பயணிப்போருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் நிகழ்ச்சியின் ஒலியை பார்ப்பவர்கள் மட்டுமே கேட்கும் வகையில் இயர்போன்கள் வழங்கப்படும்.

இந்த வசதியை பெற சிறப்புக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. நிகழ்ச்சிகளுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பி, ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளும்.

ஒப்பந்தத்தில் இணையும் டிடிஎச் நிறுவனங்களிடம் இருந்து உரிமக் கட்டணத்தை ரயில்வே பெற்றுக் கொள்ளும். ரயிலில் டிவி ஒளிபரப்புக்கு இடையே விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்நிறுவனங்கள் பெறலாம். ரயில்களில் முதல் மற்றும் ஏசி வகுப்புகளில் இந்த வசதிகளை பயணிகள் பெறலாம் என்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...