வாகனங்களில் தெளிவான பதிவு எண் பலகைகள் பொருத்தும் திட்டத்தை, நான்கு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவின் காரணமாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் வாகனங்களில் பதிவெண் எழுத மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி 50 சி.சி.,க்கு குறைவாக உள்ள டூ வீலரில் 15 மி.மீ., உயரம், 2.5 மி.மீ., பருமன் 2.5 மி.மீ., எண் எழுதி இடைவெளி 2.5 மி.மீ., விட வேண்டும். இதே 50 சி.சி., க்கு மேல் உள்ள டூவீலரில் 30 மி.மீ., பருமன் 5 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., விட வேண்டும்.மூன்று சக்கர வாகனங்களுக்கு 35 மி.மீ., பருமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., மற்றும் மற்ற வாகனங்களுக்கு 40 மி.மீ., பருமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ., என்ற அளவில் பதிவெண் எழுத வேண்டும்.
அரசின் இவ்விதிமுறையை 10 சதவீத வாகன ஒட்டிகள் கூட பின்பற்றுவதில்லை. பெரும்பாலான வாகனங்களில் எழுதப்பட்டுள்ள எண்கள் தெளிவாக தெரிவதில்லை. விபத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும் சமயங்களில், வாகனத்தின் பதிவெண்ணை பார்க்க முடியாதபடி, வளைத்தும், நெளித்தும் நம்பர்களை ஸ்டைலாக எழுதுகின்றனர். விபத்துகளில் சிக்கும் வாகனங்களை கண்டறியும் பொருட்டு, போக்குவரத்து மோட்டார் வாகன விதிப்படி, கண்டிப்பாக பதிவெண் எழுத உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு இதனிடையே அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பின் இயக்குநர் எம்.எஸ் பிட்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் வாகனங்களில் தெளிவான பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அதன்படி அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகவும் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த தலைமைநீதிபதி எஸ்.ஹெச் கபாடியா தலைமையிலான பெஞ்ச், மாநில அரசுகளுக்கு பலமுறை அறிவுறுத்தியும் வாகன பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் உறுதியான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில், இனிமேலும் கால நீட்டிப்பு செய்யப் போவதில்லை என்று கூறிய நீதிபதிகள் வாகனங்களில் தெளிவான பதிவு எண் பலகைகள் பொருத்தும் திட்டத்தை, நான்கு வாரங்களுக்குள் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுத்தனர். இதனை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
பத்து ஆண்டுகள் மோசடியான வாகனப் பதிவு எண் பலகைகளைப் பொருத்தி, பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதனை நடைமுறைப்படுத்துமாறு, உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசுகள், இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறித்தியும் மாநில அரசுகள் பதிவெண் பலகையை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment