|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 December, 2011

சட்டத்தால் சாதிக்க முடியாததை கேரளா வன்முறையால் சாதிக்க முற்படுகிறது சீமான்!


சட்டரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்க முற்படுகிறது கேரள மாநில அரசு என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும். 116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கேரள அரசு, அப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத்  திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்னையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே,  பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது. 1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...