இந்தூரில் நடந்து வரும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்திருந்தார். வீரேந்திர சேவாக் அந்த சாதனையை முறியடித்துள்ளார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும் கம்பீரும் களம் இறங்கினர். நீண்ட நாட்களுக்குப் பின் ஜோடியாக களம் இறங்கிய இவர்கள் இருவரும் துவக்கம் முதலே அடித்து விளையாடத் துவங்கினர். பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரின் பந்துவீச்சுகளை சிதறடித்த இருவரும் 23 வதுஓவரில் 176 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்தனர். கம்பீர் 67 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இவர் 67 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து சேவாக்குடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 44 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இவரும் ரன் அவுட் ஆக, இரண்டாவது விக்கெட் 316 ரன்களில் விழுந்தது. இந்நிலையில் அடுத்து வந்த ஜடேஜா 10 ரன்களே எடுத்தார். அணித் தலைவராக களம் இறங்கி ரன்களைக் குவித்த சேவாக், 149 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 219 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக பட்ச ரன்கள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஆடிய ரோஹித் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கோலி 23 ரன்களும், படேல் 3 ரன்னும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்களைக் குவித்தது. ஒருநாள் கிரிகெட் போட்டி அரங்கில், இந்திய அணி 400 ரன்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும். இன்று எடுக்கப்பட்ட 418 ரன்களே இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
No comments:
Post a Comment