அமெரிக்காவைத் தொடர்ந்து. ஐரோப்பிய மண்டல நாடுகளின் கடன் தர வரிசையையும் குறைக்கப் போவதாக உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனம் குறைத்தது. கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. இது 'AA' என்ற நிலைக்கு ஆகக் குறைக்கப்பட்டது. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் சரியாக இருந்ததால், 'AAA' என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், நாடாளுமன்றம் அனுமதித்ததைவிட மிக அதிகமான கடனை வாங்கியது அமெரிக்கா. இதையடுத்து அதன் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்தது. இதையடுத்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இந் நிலையில் ஐரோப்பாவில் நிலவும் நிதி நிலைமைக் கருத்தில் கொண்டு யூரோ மண்டலத்தில் (euro-zone countries) உள்ள அனைத்து 17 நாடுகளின் கடன் தர வரிசையையும் AAA என்ற நிலையிலிருந்து, குறைக்கப் போவதாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் மோசமான நிதிச் சூழலை மாற்ற நாளை நடக்கவுள்ள யூரோ மண்டல நாடுகளின் கூட்டத்தில், முக்கிய முடிவு எதையும் எடுக்காவிட்டால், கடன் தர வரிசை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தர வரிசை குறைக்கப்பட்டால், இந்த நாடுகள் வாங்கும் கடனுக்கான வட்டி அதிகமாகும். மேலும் இதன் விளைவாக ஒட்டுமொத்த ஐரோப்பிய மண்டலத்தின் தர வரிசையும் சரியவும் வாய்ப்புள்ளது. இதனால் தங்களது நிதிச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய நிலைக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நெருக்கப்பட்டுள்ளனர்,
No comments:
Post a Comment