பொருத்தமான வேலையைத் தேடுதல் என்பது பலருக்கும், அலுப்புத் தரக்கூடிய, வலிமிகுந்த மற்றும் எரிச்சலான செயல்பாடு. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எந்தவித செயல்பாட்டிற்கும், முறையான திட்டமிடல் என்பது கட்டாயம் வேண்டும். அந்தவகையில் வேலைதேடும் படலத்திற்கும் சரியான திட்டமிடல் வேண்டும். தொழில்முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல், உங்கள் ஆர்வத்தை அறிந்து, எதிர்கால திட்டங்களை நீங்களே வகுத்துக் கொள்ளுதல், உங்களின் பின்னணியை பகுப்பாய்வு செய்தல், உங்களின் தகுதி மற்றும் திறன்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பொருத்தமான பணி வாய்ப்புகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் வேலை தேடுதல் செயல்முறை.
தொழில்முறை தொடர்புகள் உங்களின் தொழில்சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது, வேலை தேடுதலில் முதல்நிலை செயல்பாடாகும். உங்களின் துறை சார்ந்த நிபுணர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்வதானது, நீங்கள் பொருத்தமான பணியைப் பெறுவதில் பேருதவி புரியும்.தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்துவதில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.
உங்களது ஆசிரியர்களுடனான தொடர்பு உங்களது ஆசிரியர்களுக்கு, உங்களின் படிப்பு சார்ந்த தொழில்துறை ஆசிரியர்களுடன் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுதொடர்பாக ஆசிரியர்களுடன் நீங்கள் கலந்துரையாடுவது நல்லது. அவர்களுக்கு, உங்களின் திறமைகள், குடும்ப சூழல், குண நலன்கள் மற்றும் தகுதிகள் குறித்து பெருமளவு தெரிந்திருக்கும். பல மாணவர்கள், தங்களுடைய ஆசிரியர்களின் உதவிகளால் நல்ல பணிகளைப் பெற்ற உதாரணங்கள் அதிகம் உண்டு.
பள்ளி, கல்லூரி நண்பர்களுடனான தொடர்பு வேலை விஷயத்தில், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் செய்யும் உதவிகள் முக்கியமானவை. பள்ளியைவிட, மேற்படிப்பு நிலையமான கல்லூரி தோழர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் நீங்கள் இருவரும் ஒரே துறை சார்ந்த படிப்பையே முடித்திருப்பீர்கள். எனவே, உங்களின் வகுப்புத் தோழர் ஒரு நல்ல பணியில் இருந்தால், அவருடன் உங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தால், உங்களுக்கும் நல்ல வாய்ப்புக் கிடைக்க அவர் துணைபுரிவார். பிற துறைகளில் படித்த நண்பர்களாக இருந்தால், தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் உங்களை அறிமுகம் செய்துவைத்து, உங்களுக்கு துணைபுரிவார்கள். எனவே, யார் தொடர்பையும் எளிதாக நினைத்துவிட வேண்டாம்.
பழைய மாணவர்களுடனான தொடர்பு உங்களுடைய பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் தொடர்பு உங்களுக்கு முக்கியமானது. நீங்கள் படிக்கும்போது சீனியர்களாகவும் அல்லது நீங்கள் அங்கே சேரும் முன்பாகவே சீனியர்களாகவும் அவர்கள் இருக்கலாம் மற்றும் இருந்திருக்கலாம். அவர்கள் உங்களுக்கு முன்பாகவே பணி அனுபவத்தைப் பெற்றவர்கள். எனவே, உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர்கள் நிச்சயம் துணைபுரிவார்கள். இதைத்தவிர, அவர்களின் மூலமாக, துறை நிபுணர்கள் மற்றும் வெற்றிபெற்ற தொழில்துறையினரின் தொடர்பும் உங்களுக்கு கிடைக்கலாம்.
பயிற்சிகளின்போது தொடர்பை ஏற்படுத்துதல் பயிற்சி திட்டங்கள், படிப்பின்போதான பயிற்சி(Internship), கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளும் தருணங்களில், அங்கே வரும் தொழில்முறை சார்ந்தவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம், எக்காரணம் கொண்டும் எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்தாமல், நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அவர்கள் உங்களின்பால் கவரப்பட்டு, உங்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தொழில்முறை அமைப்புகளில் இணைதல் தொழில்முறை அமைப்புகள் நடத்தும் மீட்டிங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டும். இதன்பொருட்டு, நீங்கள் சார்ந்த தொழில்முறை அமைப்புகளில்(Professional organisations) உறுப்பினராக சேர வேண்டும். மேற்கூறிய கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமாக, பலவித நிபுணர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்பு ஏற்பட்டு, அவர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படலாம்.
No comments:
Post a Comment