சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.
குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.
திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.
நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.
இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.
சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.
No comments:
Post a Comment