இலங்கையில் விடுதலைப் புலிகள் ராணுவம் இடையேயான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இந்த காட்சிகளை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படுகொலை காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி இயக்குனர் கல்லம் மக்ரே தொகுத்து வெளியிட்டுள்ளார். அவர் லண்டன் பி.பி.சி. யின் சிங்கள சேவை பிரிவுக்கு பேட்டி அளித்துள்ளார் . அப்பேட்டியில், ‘’சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது.
இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த படங்கள் நிபுணர்களால் கவனமாக ஆய்வுக்குட் படுத்தப்பட்டு அது உண்மையானதே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களும் போராளிகளும் முறைப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ராஜபக்சே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே ராணுவத்தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது. இலங்கை ராணுவம் மிகமிக ஒழுக்கமானது. நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் போரைத்தாமே வழி நடத்தியதாகவும் ஜனாதிபதி ராஜபக்சேயும் பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக கூறி வந்தனர்.
பாதுகாப்பு வளையங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இலங்கையின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியாக பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபையின் நிபுணர் குழு அறிக்கையும் விக்கிலீக்கில் வெளியான அமெரிக்காவின் குறிப்புகளும் ஐ.நா.வின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹொம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் அனைத்து உலக சட்டங்களின் கீழ் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியது ஐ.நா.வின் முதன்மையான கடமை, அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறு இழைத்து விட்டது. மேற்கத்திய நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைத் தடுக்க தவறியதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. அப்போதைய சூழலில் தீவிரவாதத்துக்கு எதிராக உலகளாவிய போர் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளின் பிரசாரத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தமது செயல்பாட்டை நியாயப்படுத்தியது.
பொது மக்களுக்கோ விடுதலைபுலிகளுக்கோ யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் தன்மையின் மூலம் அந்த இறப்பு ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது. ஐ.நா. பதுங்கு குழிகள் மீதும் அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை ராணுவம் மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் அதன் பின்னர் சற்று விலகி தாக்குதல்கள் தொடர்ந்தன. யுத்தத்தில் பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலை புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தெளிவானவை ஆவணப்படுத்தப்பட்டவை அவற்றுக்கு சவால் விடமுடியாது’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment