|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2012

மூலிகை அக்கரகாரம்


மூலிகை அக்கரகாரம் 
1) மூலிகையின் பெயர் -: அக்கரகாரம்.   
2) தாவரப்பெயர் -: ANACYCLUS PYRETHRUM.   
3) தாவரக்குடும்பம் -: COMPOSITAE.   
4) வேறு பெயர்கள் -: அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம் முதலியன.   5) தாவர அமைப்பு -: அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும். ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின்,இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.   6) பயன் படும் பாகங்கள் -: வேர்கள் மட்டும்.   
7) மருத்துவப் பயன்கள் -: மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. "அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால் உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய் கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம் கண்டால் பயந்தோடுங் காண்." அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.   உபயோகிக்கும் முறை - :இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.   தளகண்டாவிழ்தம் -: அக்கரகாரம், அதிமதுரம்,சுக்கு, சிற்றரத்தை,கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.   

அக்கரகார மெழுகு - :அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. (இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...