நாளை 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது. பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது. பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களும் வானிலை ஆய்வு செயற்கைக் கோள்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த 35,000 கி.மீ. உயர வட்டப் பாதைக்கு geosynchronous orbit என்று பெயர்.. இந்த விண்கல்லை நாஸாவின் Near-Earth Object Program பிரிவு நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டுள்ளது. அதன் பாதையையும் அதன் வேகத்தையும் கண்காணித்து வரும் இந்தப் பிரிவு, இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. நாளை இந்திய நேரப்படி பகல் 11.55 மணிக்கு இந்த விண்கல் பூமியை மிக நெருக்கமாக வந்து செல்லும். அதாவது பூமியிலிருந்து 27,358 கி.மீ தூரம் அளவுக்கு நெருங்கி வரும்.
அந்த நேரத்தில் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தேனேஷியா மீது இந்த விண்கல் கடந்து செல்லும். குறிப்பாக இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு மேலே பூமியை இது கடக்கும். இந்த விண்கல்லின் பாதையை நாஸாவின் http://eyes.nasa.gov/index.html என்ற லிங்க்-ல் உள்ள சில இணைப்புகளை பயன்படுத்தி நேரடியாகவே காணலாம். இந்த ஸ்லைடில் உள்ளது போல உங்களுக்கு நேரடியாகவே இந்த விண்கல்லின் தூரம், அது நெருங்கி வரும் வேகம் குறித்த தகவல் கிடைக்கும். நான் இந்தப் பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்தபோது விண்கல் 478641.4 மைல் தூரத்தில் இருந்தது. அது பூமியை நெருங்க 33 மணி நேரம் 50 நிமிடங்கள் 29 நொடிகள் மிச்சமிருந்தன. 2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 மீட்டர் விட்டம் கொண்டது.
இந்த விண்கல் சூரியனை வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்று. இது அடுத்தபடியாக 2046ம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 15ம் தேதி பூமிக்கு அருகே வரும். அப்போது இது 27,358 கி.மீ அளவுக்கு மிக நெருக்கமாக வராது. இதன் பாதை விலகி சுமார் 10 லட்சம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும்.
No comments:
Post a Comment