புதுமுகங்கள் நடித்த `படம் பார்த்து கதை சொல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.தாணு முன்னிலை வகித்தார்.பாடல்கள் அடங்கிய குறுந்தகடை, டைரக்டர் சேரன் வெளியிட, நடிகர் பரத் பெற்றுக்கொண்டார். விழாவில், டைரக்டர் சேரன் பேசும்போது, ’’இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு, தியேட்டர் கிடைக்காமல் தவிக்கின்றன.
பெரிய பெரிய படங்களை ஒப்பந்தம் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதில்லை. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத பரிதாப நிலையில், சிறு பட தயாரிப்பாளர்கள் உள்ளனர். என் முதல் படமான `பாரதி கண்ணம்மா'வுக்கு பெரிய தியேட்டர் கிடைக்காமல், நாகேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டு, 150 நாட்களுக்கு மேல் ஓடியது. பெரிய படங்கள் என்னும் யானைகள் மிதித்துக்கொண்டு ஓடுவதால், சிறு பட தயாரிப்பாளர்கள் படுகாயங்களுடன் காட்சியளிக்கிறார்கள்.
`படம் பார்த்து கதை சொல்' படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கவில்லை. இருப்பினும் டைரக்டரை நம்பி தயாரிப்பாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெற்றால், இன்னும் பல படங்களை அவர்கள் தயாரிப்பார்கள். இன்னும் பல புதுமுக டைரக்டர்கள் அறிமுகமாவார்கள். எனவே இந்த தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்கு உகந்த மாதிரி டைரக்டர் நல்ல படத்தை தந்து, தன்னை நிரூபிக்க வேண்டும். நல்ல முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு தருபவர்கள், தமிழ் மக்கள். இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்த பணியை சிறப்பாக முடிக்கும் ஆற்றல் மிகுந்தவர். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு அவர் நல்லது செய்ய வேண்டும். அவருடைய முயற்சியில், தமிழ் திரையுலகம் சுபிட்சம் காண வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment