சுவிஸ் வங்கிகளில் இருந்த கறுப்புப் பணத்தை எல்லாம் ஏற்கெனவே உஷாராக எடுத்துவிட்டார்கள். இனி அங்கிருந்து பணத்தை திரும்ப மீட்க முடியும் என்பது முட்டாள்தனம், என்கிறார் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியர்களின் கறுப்புப் பணம், தற்போது சுவிஸ் வங்கிகளில் இல்லை. இதை உறுதியாகச் சொல்ல முடியும். சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், அவற்றை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனால், அங்குள்ள வங்கிகளில் இருந்த இந்தியர்களின் கறுப்புப் பணம் எல்லாம், வரிச் சலுகை அளிக்கும் வேறு பல நாடுகளுக்கு மாற்றப்பட்டு விட்டன.
இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக இன்னமும் நம்புவது முட்டாள்தனமானது. இருந்தாலும், சுவிஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்திருந்த இந்தியர்கள் பற்றிய விவரங்களை, மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும். அப்படிப் பெற்றால், அது அவர்களுக்கு எதிரான, பலமான ஆதாரமாக அமையும். கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டங்களின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், பணம் எங்கு சென்றது என்பதையும் கண்டறியலாம். கறுப்புப் பண விவகாரத்தில், மத்திய அரசு வேண்டுமென்றே மந்தமாக செயல்படுவதன் மூலம், பல பெரும்புள்ளிகள் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்திருப்பது தெரிகிறது," என்றார் ஹெக்டே.
No comments:
Post a Comment