சென்னை தியாகராயநகரில் விதி மீறி கட்டப்பட்ட 25 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. இதனால் அதில் இயங்கி வந்த 100 க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் இந்த கடைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தியாகராயநகர் வியாபாரிகள் இன்று (10.11.2011) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தியாகராயநகரில் உள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு, சத்தியா பஜார், ராமேஸ்வரம் சாலை ஆகிய இடங்களில் உள்ள பெரிய ஜவுளி, நகைக்கடைகள் உள்பட 2,500க்கும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை அணிந்து அந்தந்த கடைகளின் முன்பு கூடி நின்றனர். கடை அடைப்பு அறியாத பொதுமக்கள் ஏராளமானவர்கள் பொருள் வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். அருகில் உள்ள பாண்டிபஜாரில் கடைகள் திறந்து இருந்ததால் அங்கு மக்கள் அலைமோதினர். கடை அடைப்பில் பங்கேற்ற வியாபாரிகள் ரங்கநாதன் தெருவில் உள்ள வளாகத்தில் திரண்டு வந்து ஆலோசனை நடத்தினார்கள்.
No comments:
Post a Comment