குற்றங்களை தடுக்கவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் எத்தனையோ நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வந்தாலும் தினந்தோறும் குற்றநடவடிக்கைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் தொடர்பான பதிவு குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தமிழ்நாடு காவல்துறையில் 80 நிமிடத்திற்கு ஒருமுறை குற்றம் தொடர்பான அவசர அழைப்பு பதிவு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரத்தின்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் தொடர்பான அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுவதில் தேசிய அளவில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தை வகிக்கிறது. 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. 2009-ஆண்டு தமிழ்நாட்டில் 3080 குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2010-ம் ஆண்டு 6,351 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லிதான் அதிகம்: நாட்டின் தலைநகரகம் டெல்லியோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் கவலைப்படக்கூடிய விசயமாக தெரியவில்லை. ஏனெனில் டெல்லியில் 25 செகன்டுக்கு ஒரு முறை குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுகிறதாம். அங்கு மட்டும் 2010 –ம் ஆண்டு 19 லட்சம் குற்றம் தொடர்புடைய அழைப்புகள் பதிவாகியுள்ளன. கிரேட்டர் சென்னையில் உள்ள 13 ஆயிரம் காவல்துறையினர் 1,200 குற்றங்களை கண்டுபிடித்து அதற்கு தீர்வும் கண்டுள்ளனர். அதேசமயம் 20 சதவிகிதம் அழைப்புகள் விளையாட்டுத்தனமாக வந்தவையாகும். அவை, அவசர போலீஸ் 100 ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை: காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர அழைப்பு எண்ணில் போன் செய்து விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்யப்பட்ட தகவல் ஒலிபரப்படுகிறது. இருப்பினர் ஒருசிலர் விளையாட்டுத்தனமாக அவசரபோலீஸ் 100 ல் போன் செய்து விளையாடுவதாக தெரிவித்துள்ளார் கிரேட்டர் சென்னையின் காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி. ஜூலை மாதத்தில் மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விளையாடிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிறமாநிலங்களோடு ஒப்பிடுகையில் சென்னையில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.
No comments:
Post a Comment