இந்தியாவில் 75 சதவீதம் பேருக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி வேதனை தெரிவித்தார். சென்னையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி,அரசு, கோர்ட்டு, போலீஸ் போன்ற அனைத்து துறைகளும் தங்களுக்காகத்தான் என்பது மேல்தட்டு வர்க்கத்தின் எண்ணம். இந்த மூன்று துறைகளின் செயல்பாடு சவுகரியமாக இருக்கிறது என்பது நடுத்தர வர்க்கத்தின் மேல்தர மக்களின் கருத்து. ஆனால் நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட மக்களுக்கு அதிருப்திதான் உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கும் கீழே ஒரு வர்க்கம் உள்ளது. அவர்கள் சமுதாயத்தால் கைவிடப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள். சட்டத்தின் ஆட்சி முழுமையாக நடக்கிறது என்று கூறவேண்டுமானால், இந்த கீழ்த்தட்டு மக்கள் வரை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்திருக்க வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளில் எழுத்தறிவு 67 சதவீத மக்களுக்குத்தான் கிடைத்துள்ளது. இவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே. உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம்தான். சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் எண்ணிக்கை, ஜனத்தொகையில் மூன்றில் 2 பங்கு உள்ளது. சுதந்திரம் கிடைத்து 75 சதவீத மக்களுக்கு சட்ட விழிப்புணர்வும், சட்டம் பற்றிய அறிவும் இல்லை.
சட்டம் பற்றி தெரிந்தால்தான் ஒவ்வொருவனும் தனக்குள்ள உரிமை பற்றி தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவனும் தனக்குள்ள உரிமை பற்றி தெரிந்துவிட்டால், நாட்டில் சமத்துவம் தலைதூக்கத் தொடங்கிவிடும். கருவாக உருவானதில் இருந்து வயதான பெற்றோராக மாறும்வரை ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் பாதுகாப்பும் தாக்கமும் உள்ளது. இதை எத்தனை பெற்றோர் தெரிந்துள்ளனர்? நீதி ஒருவேளை தாமதமாகலாமே தவிர, அது கிடைக்காமல் இருக்காது. தற்போது கோர்ட்டுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்வதை பார்க்கும்போது, நீதியின் மேல் மக்களுக்குள்ள நம்பிக்கை வளர்வது தெரிகிறது. மக்களின் நம்பிக்கையை நீதிபதிகள் காப்பாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment