ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கான, 108 ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடு நடந்ததாகவும், அதனால், கார்த்தி சிதம்பரம் உட்பட ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அம்மாநில கவர்னர் சிவராஜ் பாட்டீலிடம் நேற்று, பா.ஜ., கட்சி புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. பா.ஜ., தேசிய செயலர் கிரித் சோமய்யா தலைமையில், எம்.பி.,க் கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, கடந்த சில ஆண்டுகளாக, "சிகிட்சா ஹெல்த் கேர்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆறு ஆம்புலன்ஸ்களுடன் சில வருடங்களுக்கு முன், இந்நிறுவனம் மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினராக மத்திய தொலைத் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் உள்ளார். இந்த நிறுவனத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ராகுலின் முன்னாள் செயலர் ஷாபிமாதர், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா மற்றும் மருமகள் உட்பட, காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து, இந்த நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் சேவைக்காக, போலி ரசீதுகளை அரசிடம் சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி வருகிறது. ஒரே நாளில் ஒரு ஆம்புலன்ஸ், 243 நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக கணக்கு காட்டியுள்ளது.இந்தத் திட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில், ஆம்புலன்ஸ் சேவைக்கு அனுமதி பெற்றுள்ளது. இதனால், இன்னும் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment