|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2014

ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது!

'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.
சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.
சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

இதற்குத்தானே ஆசைபட்டாய் ராஜகுமாரா?


20 January, 2014

இன்னோரு புதிய கட்சி

முதல்ல கொடிய நேராப்பிடியுங்க...:
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய இன்னோரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.கட்சிக்கு பெயர் மக்கள் தேசிய கட்சி.சென்னை பத்திரிகையாளர்களிடம் கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் போது தலைகீழாக காட்டினார் தலைவர்.'முதல்ல கொடியை நேராபிடியுங்க அப்புறம் மத்ததை பார்கலாம்' என்றதும் அவசர,அவசரமாக கொடியை நேராகபிடித்தார்.

டீ மாஸ்டர் தேவை...

என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ,மோடியை டீகடைக்காரர் என்று பேசி நாடு முழுவதும் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் காங்.கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்.சென்னையில் காங்.கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் அருகே பா.ஜ.,கவினர் நடத்திய வித்தியாசமான டீகடையில் இடம் பெற்றிருந்த போஸ்டர்.

18 January, 2014

சரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்!

'இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற அரசு அறிவிப்பைப் பார்க்கும்போது, இனிமேல் என்போல் இந்தியாவில் போலியோவால் எவரும் மாற்றுத் திறனாளி ஆக மாட்டார்கள் என்ற மன நிறைவு ஏற்படுகிறது' என்று தீர்க்கமாகப் பேசத் தொடங்குகிறார், கடலில் 43 கி.மீ. நீந்திச் சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பிரகாஷ்.
தடைக்கற்களைத் தகர்த்த தன் சாதனைச் சரித்திரத்தை விவரிக்கிறார்...'என் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் தோப்பு. அப்பா அம்மா வேலைக்காக மும்பைக்கு வந்துட்டாங்க. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். என்னுடன் பிறந்தவங்க ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். நான் கடைசிப் பையன். பிறந்த ஒன்றரை வருஷத்துலேயே போலியோ அட்டாக் வந்து, கழுத்துக்குக் கீழே செயலிழந்திடுச்சு. கை, காலை அசைக்கக்கூட முடியாது. பக்கத்தில் ஒரு ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணாங்க. அங்கே இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதரோட அஞ்சு வருஷ சிகிச்சையால்தான் என்னால் கைகளை அசைக்க முடிஞ்சது. வாக்கிங் ஸ்டிக் துணையோட நடக்க ஆரம்பிச்சேன். அவரே என்னை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியிலும் சேர்த்தார்.
எங்க பகுதியில் விளையாடுறதுக்கு இடமே இல்லை. எங்க ஏரியாப் பசங்க பக்கத்துல இருக்கிற கடற்கரைக்குப் போயிடுவாங்க. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த செல்வகுமார் அண்ணன், என்னையும் தோள்ல தூக்கிட்டுப் போவார். கடல்ல நீந்தும் பசங்களைப் பார்க்கிறப்ப, எனக்கு ஏக்கமா இருக்கும். 'உன்னாலயும் நீந்த முடியும்’னு செல்வகுமார் அண்ணன், ஒரு நாள் கடலில் தூக்கிப் போட்டுட்டார். தட்டுத் தடுமாறி கையால் நீச்சல் அடிக்கக் கத்துக்கிட்«டன். அதில் இருந்து கடல் எனக்குப் பழக்கமாகிடுச்சு. வீட்டுக்குத் தெரியாம கடல்ல குளிக்கப் போவோம். கடல்ல நாலு மணி நேரம் ஜாலியா நீச்சலடிச்சிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்கு வந்திடுவோம்.
6-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு வறுமை வாட்டியது. அப்பா நடத்திட்டுவந்த மளிகைக் கடையில் அவங்களுக்கு ஒத்தாசையா இருந்தேன். இருந்தாலும், 'உன்னால் சாதிக்க முடியும். மத்தவங்களுக்கு உன்னால உதவ முடியும்’னு அப்பா ஊக்கப்படுத் திக்கிட்டே இருப்பார். அப்படியே வாழ்க்கை ஓடிட்டு இருந்தது. என்னுடைய 18-வது வயசில் முதல் முதலா ரத்த தானம் செஞ்சேன். அதில் இருந்து தொடர்ந்து ரத்த தானம் செய்தேன்.
1995-ல், திருநெல்வேலியில் நடந்த திருவிழாவுக்கு, குடும்பத்தோட போயிட்டோம். அந்தச் சமயம், மும்பையில் இருந்த அப்பாவுக்கு உடல் நிலை மோசமாகி, அட்மிட் பண்ணியிருக்காங்க. அவருக்கு ஏத்த ரத்தம் கிடைக்காம இறந்துட்டார். எவ்வளவோ பேருக்கு ரத்த தானம் செஞ்சிருக்கேன். ஆனா, எங்க அப்பாவுக்குத் தேவைப்படும்போது ரத்தம் கிடைக்கலை. அந்த சோகத்தில், ரத்த தானம் செய்றதையே நிறுத்திட்டேன். மளிகைக் கடையை மூடிட்டு கடை கடையா வாஷிங் சோப், வீடுவீடா பால், தெருத் தெருவா காய்கறினு ட்ரை சைக்கிளில் போய்ப் போடுவேன். அதில் கிடைச்ச வருமானத்தை வெச்சுத்தான் குடும்பத்தைக் காப்பாத்தினேன்.
ஓரளவுக்குப் பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிச்சதுக்கப்புறம், நாம கொடுக்கிற ரத்தம் கொஞ்சம் உயிர்களையாவது காப்பாத்தட்டுமேனு மறுபடியும் 1999-ல் ரத்த தானம் பண்ண ஆரம்பிச்சேன்' என்ற பிரகாஷ், 'பெஹச்சான் சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி, ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து தனிப்பட்ட முறையில் 6,000 யூனிட் ரத்தம் சேகரித்துத் தந்துள்ளார். மேலும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தாராவிப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார்.
தன்னுடைய நீச்சல் சாதனைக்கான களம் பற்றி பிரகாஷ் தொடர்ந்தார். 'குடும்பம் ஓரளவு நல்ல நிலைமையை அடைந்ததும், விளையாட்டில் சாதிக்க முடிவெடுத்து, அரபிக்கடலிலேயே தீவிரமாப் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட ஏழ்மையான நிலையிலேயும் கடலில் பயிற்சி எடுப்பதைக் கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரி ஸ்ரீ பாலசாஹிப் கட்ஜே, ஒர்லி போலீஸ் ஸ்விம்மிங் பூலில் பயிற்சி பண்ண அனுமதித்தார். 42 கி.மீ. கடலில் நீந்திச் சாதனை செய்யணும்னு தீவிரமா உழைச்சேன்.
2012 மார்ச் 8-ம் தேதி மதியம் 12.45-க்கு மும்பை கேட்வேயில் இருந்து நீந்த ஆரம்பிச்சேன். 21 கி.மீ தொலைவில் இருக்கும் ரேவாஸ் தீவை தொட்டுட்டு மறுபடியும் நீரோட்டத்தின் எதிர்திசை யில் பயணிக்கும்போதுதான் ரொம்பக் கஷ்டமா இருந்தது. இரவில் கடலில் மிதக்கும் எந்தப் பொருளும் தெரியாது. காணாமப் போயிட்டா தேடுறது கஷ்டம். ஒரு பெரிய மீன் தன்னோட வாலால் அடிச்சதில், என் கையில் பெரிய கீறல் விழுந்தது. ஆனாலும் விடாமுயற்சியோடு பதினேழரை மணி நேரம் நீந்தி கேட்வேயை அடையும் போது, அடுத்த நாள் காலை ஆறே கால் மணி' என்று சாதனை படைத்த தனது திகில் நிமிடங்களைப் பகிர்ந்தார்.
''காசு பணம் இருந்தால் மட்டும்தான், மத்தவங்களுக்கு உதவ முடியும் என்பது இல்லை. நல்ல மனசு இருந்தாலும் உதவலாம். 'உனக்கு நல்ல மனசு இருக்கு. உன்னால மத்தவங்க ளுக்கு உதவ முடியும்!’ - அப்பாவோட இந்த வார்த்தைகள்தான் என்னை இயக்குது. என் மாதிரி இருக்கிறவங்களுக்காகப் போராடத் தூண்டுது' என்று பிரகாஷ் நிறைவு செய்தபோது, அவர் கண்களில் மின்னி மறைந்தது நம்பிக்கைக் கீற்று!

17 January, 2014

ஊழலை ஒழிக்க ராகுலின் ஒன்பது அஸ்திரங்கள்?


வெந்தவன், வேகாதவன், அரவேக்காடு...


தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க. அதுல ஒரு படம்தான் இது. இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி வருவாய்ங்களோ). மூன்று ஹீரோயின் இருக்குறப்போ மூன்று ஹீரோ இருந்தாகணுமே இருக்காங்க. ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் மியூசிக் பண்றார். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது. மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம். அந்த குணத்தைத்தான் டைட்டில் குறிப்பிடுகிறதாம்.

கருணாநிதி பிரதமரானால்...?

தனித்தே நின்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆவேன்’ என்கிறார் ஜெயலலிதா. தி.மு.க-வோ, தே.மு.தி.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று பிடிவாத ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கும் நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கலைஞர் பிரதமர் ஆனால், என்னவெல்லாம் நடக்கும்? தமிழர்களே, தமிழர்களே வாருங்கள். அந்த காமெடிகளைப் பார்ப்போம்.
கலைஞர் பிரதமரானதும் முதல்ல வர்றது குழப்பம்தான். நமக்கு இல்லைங்க, அவருக்கு. முதல்வரா இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தாலும் மாஞ்சு மாஞ்சு பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவார். அவரே பி.எம் ஆகிட்டா, அப்புறம் யாருக்குக் கடிதம் எழுதுறது?
இந்தக் குழப்பத்தை இப்படித்தான் தீர்ப்பார். மாநில முதல்வர்கள்தான் பிரதமருக்குக் கடிதம் எழுதணுமா? பிரதமர், முதல்வர்களுக்குக் கடிதம் எழுதலாமே? 'உ.பி முதல்வர் உடன்பிறப்பே அகிலேஷ் யாதவ், முஸாபர் நகர் கலவரம், எப்படி இருக்கு நிலவரம்?’ என்று ஆரம்பிப்பவர் அப்படியே இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களுக்கும் 'மானே, தேனே, பொன்மானே’ போட்டுக் கடிதம் எழுத ஆரம்பிச்சிடுவார்.
பி.எம். ஆனதும் செய்கிற முதல் வேலை தந்திச் சேவையை மறுபடியும் தொடங்குவதுதான். முதல் தந்தி யாருக்கு? அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு. 'சிரியா என்றால் உதடுகள் ஒட்டாது, ஒபாமா என்றாலும் உதடுகள் ஒட்டும், அமெரிக்கா என்றாலும் உதடுகள் ஒட்டும்’னு டெய்லி ஒரு தந்தி. ஒபாமா பதறிப்போய், 'அமெரிக்கர்களே, அமெரிக்கர்களே, என்னைக் கடலில் தூக்கிப் போடுங்கள்’னு கதற ஆரம்பிச்சிடுவார்.
டெல்லியில் மாதத்துக்கு இரண்டு முறை நடக்கும் பாராட்டு விழாக்களில், கலை நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடுவது யார் என்று நமீதா, ராக்கி சாவந்த், மல்லிகா ஷெராவத் இவர்களுக்குள் போட்டா போட்டி நடக்கும்.

அப்புறம் என்னங்க, வைரமுத்து இல்லாத பாராட்டு விழாவா? 'டெல்லி... இந்தியாவின் உச்சி. உச்சியிலேயே உட்கார்ந்த தமிழன் நீ. ஆக்ரா தாஜ்மகால் உன்னை அண்ணாந்து பார்க்கிறது’ னு ஐஸ் கவிதைகளாகப் பொழிய ஆரம்பிச்சிடுவாரே.
வாலி விட்ட இடத்தைப் பிடிக்கணும்ல. உடனே களம் இறங்குவார் வித்த கவிஞர், ஸாரி, வித்தகக் கவிஞர் பா.விஜய், 'நீ டெல்லியையே பிடித்த கில்லி’ அப்படினு மொக்கைக் கவிதையை அள்ளிவிடுவார்.
'வேட்டி கட்டிய தமிழன்தான் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று அன்று நான் சொன்னதால், பல இடையூறுகளைச் சந்தித்தேன். தமிழன் வேட்டி கட்டுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தமிழே வேட்டி கட்டினால், அதுதான் என் தமிழ் ஆசான் கலைஞர்’ னு கமலும் கொழகொழன்னு பேசுவார்.
வழக்கமா தமிழ்நாட்டில் இருந்து எஸ்கேப் ஆக இமயமலைக்குப் போவார் ரஜினி. ஆனா டெல்லியில்தான் கலைஞர் இருக்கிறார், பாராட்டு விழாக்கள் நடக்குதுனு கேள்விப்பட்டதும் இமயமலைக்குப் பதிலா மாலத்தீவு, அந்தமான், நிக்கோபார்னு ரவுண்ட்லேயே இருப்பார் ரஜினி.
அழகிரிதான் வெளியுறவுத் துறை அமைச்சர். பாகிஸ்தான் அதிபர், சீன அதிபர்னு எல்லோரிடமும் தப்புத்தப்பா இங்கிலீஷ் பேசி, அவங்க ஆத்திரப்பட்டு அடிக்கடி இந்தியா மேல போர் தொடுப்பாங்க.
கனிமொழிதான் நிதியமைச்சர். பட்ஜெட்ல பாதியை டெல்லி சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒதுக்கிடுவாங்க.
அப்பவும் ஸ்டாலின் துணைப் பிரதமர். 'காது எப்போ குத்துவாய்ங்க, கெடா எப்போ வெட்டுவாய்ங்க’னு கவுண்டமணி மாதிரி 'எப்போதான் தலைவர் ஆக்குவாங்க’னு வெயிட்டிங்லேயே இருப்பார்.
ஆனா ஒண்ணுங்க... பிரதமரே ஆனாலும் கலைஞர் பழசை எல்லாம் மறக்க மாட்டார். கச்சத்தீவை மீட்போம், தமிழ் ஈழம்தான் ஒரே வழி, தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்குவோம்’னு அப்பவும் தீர்மானம் போடுவார், தி.மு.க பொதுக் குழு, செயற் குழுக்களில் மட்டும்!

16 January, 2014

மனிதனும் விலங்கு தான்...


ஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார். பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.

15 January, 2014

மாடுகளில் மனிதர்களுண்டு மனிதர்களில்தான் மனிதர்கள் இல்லை!

எந்த வம்பு தும்புக்குக்கும் போகாமல் 
சாதுவாய் இருக்குது பசு மாடு!
சோறு கண்ட இடம் சொர்க்கமென்று
விழுந்த இடத்தில் தூங்குது, கோயில் மாடு!
காலையில் ஆபீஸ் போய்
மாலையில் வீடு வருது செக்கு மாடு!
உழைத்து உழைத்து
ஓடாய் தேயுது உழவு மாடு!
எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல்
சுதந்திரமாய் சுற்றித் திரியுது மலை மாடு!
பத்தடிக்கு பத்தடி உட்கார்ந்த இடத்தில்
காரியம் முடிக்குது, பட்டி மாடு
செல்ஃபோனும் பைக்குமாக
வர்த்தகம் பேச ஓடுது... வண்டி மாடு!
ஏ.சி. அறையில், ஆங்கிலம் பேசி
ஹை-டெக்காக டை கட்டுது ஜெர்சி மாடு!
இரவு முழுவதும் ஊரைச் சுற்றி சந்து முனையில்
டூ-வீலரை தள்ளுது ஊக்காளி மாடு!
துஷ்பிரயோகம் செய்து ஓசைப் படாமல்
மக்கள் காசை சாப்பிடுது கள்ள மாடு!
சுயநலமாய் சமூக வயலை மேயுது
புலித் தோல் போர்த்திய பசு மாடு!
மேலதிகாரிகளிடம்
தலையாட்டி  வாழுது பூம்பூம் மாடு!
அக்கிரமம் கண்டு, பொங்கியெழாமல்
மேய்ந்து திரியுது மந்தை மாடு!
அநியாயத்தை எதிர்த்து  
தனியனாய் ஜெயிக்குது ஜல்லிக்கட்டு மாடு!
மாடுகளில் மனிதர்களுண்டு
மனிதர்களில்தான் மனிதர்கள் இல்லை! 
                                                                                       கவிதை: எஸ்.கதிரேசன்

14 January, 2014

தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு?


தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது.அதனை அறிவதற்கு தமிழகத்தின் வரலாற்று ஏடுகளை சற்று பின்நோக்கி புரட்டிப் பார்ப்பதற்கு உவகைக்குரிய இந்த திருநாள் மிகவும் பொருத்தமானது.

மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டு தான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் 'மெட்ராஸ் பிரெசிடென்சி' (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.தற்போது காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த.பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 15-8-1947-ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
 
தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார். இதற்கிடையே, 'தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றம் செய்ய வேண்டும்' என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அன்னாவின் ஆட்சி காலமான 14-1-1969 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு 'தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதே இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும்

10 January, 2014

ராகு(ல்) காலம்...


லோக்சபா தேர்தலையொட்டி போஸ்டர் களம் சூடு பிடித்துவருகிறது.மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில்தான் எத்தனை எள்ளல்.ஒரு பக்கம் ஐநூறு கோடி ரூபாய் செலவழிச்சு ராகுலின் இமேஜை உயர்த்த காங்.திட்டமிட்டு கொண்டு இருக்க இன்னோரு பக்கம் ஐந்தே ரூபாய்ல அவரது இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

இது மட்டும் நடந்தா, உலகம் அழிஞ்சுடுமா?

பல வருடங்களுக்குப் பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்பது என்பதே அது. இப்படி ஒரு விஷயத்தில் ஒற்றுமையா இருக்கிற இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டால்...? அதைவிட தமிழர்களுக்கு என்டர்டெயின்மென்ட் இருக்க முடியுமா என்ன? வாங்க, என்ன நடக்கும்னு பார்ப்போம்!
ஜெயலலிதா, திருவாரூரில் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார். கருணாநிதி, ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலையில் நிற்பார். 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லைனு புரட்சித்தலைவரே பாடிய சின்னம்’ என்று ஜெயலலிதாவும், 'இல்லை என்ற சொல்லையே இல்லாமல் ஆக்குவதுதான் இலை, இரட்டை இலை’ என்று கருணாநிதியும் பிரசாரம் செய்து பீதியைக் கிளப்புவார்கள்.
'கருணாநிதி என்றாலும் உதடுகள் ஒட்டாது, ஜெயலலிதா என்றாலும் உதடுகள் ஒட்டாது’னு முரசொலியில் கவிதை எழுதுவாரே கலைஞர்.
'சோனியாவை சொக்கத் தங்கம் என்று சொன்னேன். அன்புத் தங்கை ஜெயலலிதாவோ எனது வசனத்தில் 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்த உங்கள் தங்கம்’ என்று கூட்டத்தில் பேசுவார். அப்புறம் என்ன, தங்கத்தின் விலையெல்லாம் தாறுமாறாக் குறையும்.
ஜெயலலிதா முதல்வர் ஆவார். ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார்.
இதுவரை அமைச்சர்களையே மாற்றிக்கொண்டிருந்த ஜெயலலிதா, துணை முதல்வரையும் மாற்றி 'பகீர்’ கொடுப்பார்.
'தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள். அன்பு அண்ணன் கலைஞர் கருணாநிதி குடும்பத்திலேயே அருள்நிதி, உதயநிதி, கலாநிதி, தயாநிதி என்று ஏகப்பட்ட நிதிகள் இருக்கும்போது, எப்படி வரும் தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை?’ என்று கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவார் ஜெயலலிதா.
அழகிரி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆவார். ஆங்கிலத்தில் பேசும் அதிகாரிகள், அந்தமான் தீவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆவார்கள்.
கலைஞர் வசனத்தில், ராமராஜன் சரித்திரப் படத்தில் நடிப்பார். டவுசர் அணிந்த ஒரே தமிழ் மன்னன் ராமராஜன்தான். போர்க்களத்தில் யானைப் படை, குதிரைப் படை மத்தியில் பாட்டுப் பாடியே யானை, குதிரைகளிடம் பால் கறப்பார் கிராமத்து நாயகன்.
கலைஞர் நாள் தவறாமல் சட்டசபைக்கு வருவார். ஜெயலலிதாவைப் புகழ்ந்து துரைமுருகனும், கலைஞரைப் புகழ்ந்து ஓ.பன்னீர்செல்வமும் பாராட்டு மழை பொழிவார்கள். தேவைப்பட்டால், சட்டசபைக்கு வெளியேயும் பாராட்டு விழாக்கள் நடக்கும்.
வருடத்துக்கு 300 பாராட்டு விழாக்கள் நடைபெறும் என்பதால், நிஜமாகவே கமல்ஹாசன் வெளிநாட்டில் குடியேறிவிடுவார்.
என்ன ஒண்ணு, டாஸ்மாக் சேல்ஸ் மட்டும் கன்னாபின்னானு எப்பவுமே ஏறிக்கிட்டேதான் இருக்கும்!

04 January, 2014

நாங்கள் குற்றமற்றவர்கள்!


சொல்லுங்க அண்ணே சொல்லுங்க!


கேப்டன பார்த்து அரசியல் பேசிட்டு வந்தேன்னு சொன்னீங்களே அப்பயிருந்து பிரஷரா? இல்லை உங்க ஆட்கள் அண்ணே உடனே த.மா.கா.,வ ஆரம்பிச்சுருவோம் இதுதான் சரியான நேரம்னு உங்கள நெருக்கடி கொடுத்துட்டே இருக்காங்களே அதுனால ஏற்பட்ட பிரஷரா?

03 January, 2014

முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்.

ஜனவரி 3: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் -சாவித்திரிபாய் புலே மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார். அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார்.  நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ ! பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே.  சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன

1852ல்  இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான  பல்வேறு  ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில்  இருவரும் இலவச உணவு பரிமாறினர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த  இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.  வாழ்வே சேவையாகிப்போன அவரின் பிறந்த நாள் இன்று.

அவரின் கவிதை கீழே :
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில், சோராமல் உலை
உழை-ஞானத்தை,செல்வதை சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே, போ, போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக.

27 December, 2013

வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.

10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். 
பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம். வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.. இப்படிப்பட்ட சீரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

23 December, 2013

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன...

டிசம்பர்; 23 கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம். தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது. பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்  அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன்  வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.

அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார். சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...