|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 January, 2014

சரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்!

'ந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற அரசு அறிவிப்பைப் பார்க்கும்போது, இனிமேல் என்போல் இந்தியாவில் போலியோவால் எவரும் மாற்றுத் திறனாளி ஆக மாட்டார்கள் என்ற மன நிறைவு ஏற்படுகிறது' என்று தீர்க்கமாகப் பேசத் தொடங்குகிறார், கடலில் 43 கி.மீ. நீந்திச் சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பிரகாஷ்.
தடைக்கற்களைத் தகர்த்த தன் சாதனைச் சரித்திரத்தை விவரிக்கிறார்...'என் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் தோப்பு. அப்பா அம்மா வேலைக்காக மும்பைக்கு வந்துட்டாங்க. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். என்னுடன் பிறந்தவங்க ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். நான் கடைசிப் பையன். பிறந்த ஒன்றரை வருஷத்துலேயே போலியோ அட்டாக் வந்து, கழுத்துக்குக் கீழே செயலிழந்திடுச்சு. கை, காலை அசைக்கக்கூட முடியாது. பக்கத்தில் ஒரு ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணாங்க. அங்கே இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதரோட அஞ்சு வருஷ சிகிச்சையால்தான் என்னால் கைகளை அசைக்க முடிஞ்சது. வாக்கிங் ஸ்டிக் துணையோட நடக்க ஆரம்பிச்சேன். அவரே என்னை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியிலும் சேர்த்தார்.
எங்க பகுதியில் விளையாடுறதுக்கு இடமே இல்லை. எங்க ஏரியாப் பசங்க பக்கத்துல இருக்கிற கடற்கரைக்குப் போயிடுவாங்க. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த செல்வகுமார் அண்ணன், என்னையும் தோள்ல தூக்கிட்டுப் போவார். கடல்ல நீந்தும் பசங்களைப் பார்க்கிறப்ப, எனக்கு ஏக்கமா இருக்கும். 'உன்னாலயும் நீந்த முடியும்’னு செல்வகுமார் அண்ணன், ஒரு நாள் கடலில் தூக்கிப் போட்டுட்டார். தட்டுத் தடுமாறி கையால் நீச்சல் அடிக்கக் கத்துக்கிட்«டன். அதில் இருந்து கடல் எனக்குப் பழக்கமாகிடுச்சு. வீட்டுக்குத் தெரியாம கடல்ல குளிக்கப் போவோம். கடல்ல நாலு மணி நேரம் ஜாலியா நீச்சலடிச்சிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்கு வந்திடுவோம்.
6-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு வறுமை வாட்டியது. அப்பா நடத்திட்டுவந்த மளிகைக் கடையில் அவங்களுக்கு ஒத்தாசையா இருந்தேன். இருந்தாலும், 'உன்னால் சாதிக்க முடியும். மத்தவங்களுக்கு உன்னால உதவ முடியும்’னு அப்பா ஊக்கப்படுத் திக்கிட்டே இருப்பார். அப்படியே வாழ்க்கை ஓடிட்டு இருந்தது. என்னுடைய 18-வது வயசில் முதல் முதலா ரத்த தானம் செஞ்சேன். அதில் இருந்து தொடர்ந்து ரத்த தானம் செய்தேன்.
1995-ல், திருநெல்வேலியில் நடந்த திருவிழாவுக்கு, குடும்பத்தோட போயிட்டோம். அந்தச் சமயம், மும்பையில் இருந்த அப்பாவுக்கு உடல் நிலை மோசமாகி, அட்மிட் பண்ணியிருக்காங்க. அவருக்கு ஏத்த ரத்தம் கிடைக்காம இறந்துட்டார். எவ்வளவோ பேருக்கு ரத்த தானம் செஞ்சிருக்கேன். ஆனா, எங்க அப்பாவுக்குத் தேவைப்படும்போது ரத்தம் கிடைக்கலை. அந்த சோகத்தில், ரத்த தானம் செய்றதையே நிறுத்திட்டேன். மளிகைக் கடையை மூடிட்டு கடை கடையா வாஷிங் சோப், வீடுவீடா பால், தெருத் தெருவா காய்கறினு ட்ரை சைக்கிளில் போய்ப் போடுவேன். அதில் கிடைச்ச வருமானத்தை வெச்சுத்தான் குடும்பத்தைக் காப்பாத்தினேன்.
ஓரளவுக்குப் பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிச்சதுக்கப்புறம், நாம கொடுக்கிற ரத்தம் கொஞ்சம் உயிர்களையாவது காப்பாத்தட்டுமேனு மறுபடியும் 1999-ல் ரத்த தானம் பண்ண ஆரம்பிச்சேன்' என்ற பிரகாஷ், 'பெஹச்சான் சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி, ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து தனிப்பட்ட முறையில் 6,000 யூனிட் ரத்தம் சேகரித்துத் தந்துள்ளார். மேலும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தாராவிப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளார்.
தன்னுடைய நீச்சல் சாதனைக்கான களம் பற்றி பிரகாஷ் தொடர்ந்தார். 'குடும்பம் ஓரளவு நல்ல நிலைமையை அடைந்ததும், விளையாட்டில் சாதிக்க முடிவெடுத்து, அரபிக்கடலிலேயே தீவிரமாப் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட ஏழ்மையான நிலையிலேயும் கடலில் பயிற்சி எடுப்பதைக் கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரி ஸ்ரீ பாலசாஹிப் கட்ஜே, ஒர்லி போலீஸ் ஸ்விம்மிங் பூலில் பயிற்சி பண்ண அனுமதித்தார். 42 கி.மீ. கடலில் நீந்திச் சாதனை செய்யணும்னு தீவிரமா உழைச்சேன்.
2012 மார்ச் 8-ம் தேதி மதியம் 12.45-க்கு மும்பை கேட்வேயில் இருந்து நீந்த ஆரம்பிச்சேன். 21 கி.மீ தொலைவில் இருக்கும் ரேவாஸ் தீவை தொட்டுட்டு மறுபடியும் நீரோட்டத்தின் எதிர்திசை யில் பயணிக்கும்போதுதான் ரொம்பக் கஷ்டமா இருந்தது. இரவில் கடலில் மிதக்கும் எந்தப் பொருளும் தெரியாது. காணாமப் போயிட்டா தேடுறது கஷ்டம். ஒரு பெரிய மீன் தன்னோட வாலால் அடிச்சதில், என் கையில் பெரிய கீறல் விழுந்தது. ஆனாலும் விடாமுயற்சியோடு பதினேழரை மணி நேரம் நீந்தி கேட்வேயை அடையும் போது, அடுத்த நாள் காலை ஆறே கால் மணி' என்று சாதனை படைத்த தனது திகில் நிமிடங்களைப் பகிர்ந்தார்.
''காசு பணம் இருந்தால் மட்டும்தான், மத்தவங்களுக்கு உதவ முடியும் என்பது இல்லை. நல்ல மனசு இருந்தாலும் உதவலாம். 'உனக்கு நல்ல மனசு இருக்கு. உன்னால மத்தவங்க ளுக்கு உதவ முடியும்!’ - அப்பாவோட இந்த வார்த்தைகள்தான் என்னை இயக்குது. என் மாதிரி இருக்கிறவங்களுக்காகப் போராடத் தூண்டுது' என்று பிரகாஷ் நிறைவு செய்தபோது, அவர் கண்களில் மின்னி மறைந்தது நம்பிக்கைக் கீற்று!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...