|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 May, 2011

இங்க்லாந்தில் தேடப்பட்ட போர்க்குற்றவாளி போஸ்னிய மாஜி ராணுவத் தளபதி செர்பியாவில் கைது


1995ல் நடந்த செரப்னிகா இனப்படுகொலைக்கு மூளையாக திகழ்ந்தவரான, முன்னாள் போஸ்னிய செர்பிய அரசின் ராணுவத் தலைமைத் தளபதியான ரட்கோ மிலாடிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக மக்களை நடு நடுங்க வைத்தது செரப்னிகா இனப்படுகொலையாகும். 1995ம் ஆண்டு நடந்த இந்த கொடூரப் படுகொலையில், ஆயிரக்கணக்கான போஸ்னியர்களைக் கொன்று குவித்தது போஸ்னியாவை அப்போது ஆண்டு வந்த செர்பிய ஆட்சியாளர்களின் ராணுவம்.

ஈழத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவத்திற்கும், செரப்னிகா சம்பவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசம் கிடையாது. ஈழத்தில் நடந்ததைப் போலவே கொடூரமாக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைதான் செரப்னிகா சம்பவம்.

இந்த சம்பவத்திற்கு முக்கியக் காரணகர்த்தாதான் இந்த மிலாடிக். இவரை கடந்த 16 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது சிக்கியுள்ளார் மிலாடிக்.

செர்பியாவில் வைத்து இவரைக் கைது செய்துள்ளனர். ஐரோப்பாவிலேயே அதிகம் தேடப்பட்ட நபர் இந்த காட்டுமிராண்டி மிலாடிக்தான். வடக்கு செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து மிலாடிக் கைது செய்யப்பட்டார். 69 வயதான இவரை பின்னர் கோர்ட்டில் நிறுத்தினர்.

மிலாடிக் கைது செய்யப்பட்டதை செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் உறுதி செய்துள்ளார். அவரை யூகோஸ்லேவியாவுக்கான போர்க்குற்ற சர்வதேச டிரிப்யூனல் முன்பு விரைவில் ஆஜர்படுத்தி அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். தி ஹேக் நகரில் இந்த கோர்ட் செயல்பட்டு வருகிறது. யூகோஸ்லேவிய போர்க்குற்றங்களுக்காகவே தனியாக அமைக்கப்பட்டது இந்த கோர்ட்.

செரப்னிகாவில் நடந்தது என்ன?

1992 முதல் 1995 வரை போஸ்னிய முஸ்லீம்களுக்கும், செர்பியர்களுக்கும் இடையிலான போர் அனைவரும் அறிந்ததுதான். 44 மாத சரயேவோ நகர முற்றுகை, இன அழிப்பு முகாம்கள், கைது மற்றும் சித்திரவதைப் படலங்கள் இந்த காலகட்டத்தில் போஸ்னியா-ஹெர்ஸகோவினா பகுதியில் அரங்கேறின.

இதில் செரப்னிகா என்ற இடத்தில் கிட்டத்தட்ட 8000 முஸ்லீம் ஆண்கள் மற்றும் இளைஞர்களை மொத்தமாக குவித்து கொடூரமாக படுகொலை செய்தது போஸ்னியாவை தனது பிடியில் வைத்திருந்த செர்பிய ராணுவம். ஐரோப்பாவில் 2ம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை சம்பவம் இதுதான்.

செரப்னிகா இனப்படுகொலைச் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியவர்தான் இந்த மிலாடிக். இவரைத்தான் தற்போது செர்பியா கைது செய்துள்ளது.

ராஜபக்சே கும்பலுக்கு எப்போது விலங்கு?

ஈழத்தையும், செரப்னிகாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் செரப்னிகாவை தூக்கிச் சாப்பிடும் வகையில் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா கும்பல் செய்த அட்டூழியங்கள், அநியாயங்கள், கொடூரக் கொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள், கொலைகள் மிகப் பெரியவை.

செரப்னிகாவுக்காக கதறித் துடித்த ஐரோப்பிய சமூகமும், பிற மேற்கத்திய நாடுகளும், அந்த சம்பவத்திற்காக போர்க்குற்ற டிரிப்யூனலையே அமைக்கும் அளவுக்கு உறுதியாக செயல்பட்டன.

ஆனால் ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து எந்த நிவாரணத்திற்கும் இதுவரை வழி பிறக்கவில்லை. ஆயிரம் செரப்னிகாவுக்கு சமமான மகா கோரமான படுகொலை, இன அழிப்பை இலங்கை ராணுவம் சரத் பொன்சேகா தலைமையிலும், ராஜபக்சே தலைமையிலும் செய்து முடித்தது.

இன்று மிலாடிக் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...