இரு தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில அரசு நல்லதொரு முடிவொன்றை எடுத்திருக்கிறது. இளைஞர்கள் மது அருந்தும் வயதை 21-லிருந்து 25 ஆக உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பதன் மூலம் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் மது அருந்துவது குற்றம். இவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதும் குற்றம்.
ஆனால், பீர் போன்ற குறைந்த போதை தரும் மதுபானங்களை 21 வயது நிறைவடைந்த இளைஞர்கள் இப்போதுள்ளதைப் போல தொடர்ந்து பயன்படுத்தவும், கடைகளில் வாங்கவும் அரசு அனுமதித்துள்ளது.
முதலாவது சட்டம், வணக்கம் சொல்லி வாழ்த்த வேண்டிய ஒன்று. இரண்டாவதாக, பீர் குடிப்பவர்களுக்கும் வயது வரம்பை 25 ஆக உயர்த்தியிருக்கலாம் என்பது நமது ஆதங்கமாக இருந்தாலும், இந்த 21 வயது நிபந்தனையைக் கடுமையாக அமல்படுத்தினால்கூட போதும், அந்த மாநில அரசு தன் மண்ணின் மைந்தர்களுக்குச் செய்யும் பெரும் சேவை என்று உறுதிபடக் கூறலாம்.
ஏனென்றால், 14 வயதுக்குள் மது குடிக்கத் தொடங்குவோர் போதைக்கு அடிமையாகிவிடுவதாகவும், 21 வயதுக்குப் பிறகு மது அருந்தத் தொடங்குவோரில் 9 சதவீதம் பேர் மட்டுமே போதைக்கு அடிமையாகி விடுவதாகவும் அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு புள்ளிவிவரம் தருகிறது.
தமிழ்நாட்டில் அந்நிய மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டபிறகு, முன்னெப்போதும் இல்லாதவகையில் இளைஞர்கள், குறிப்பாக மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பீர் அருந்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
பிளஸ் 2 படிக்கும் மாணவரின் வயது அதிகபட்சம் 18 ஆக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த மாணவர்கள் நட்புக்காக பீர் மட்டும் குடிப்பதாகச் சொல்லிக்கொண்டு குடிப்பழக்கத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எதற்கெடுத்தாலும் பார்ட்டி வைக்கப்படுகிறது. இவர்கள் வெறும் பீர் குடிப்பதாகவும், அது மது அல்ல, ஆகவே குடிப்பதாக ஆகாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு திரைப்படங்களும் மோர் குடிக்கிறதுபோல பீர் என்பதாக வசனங்கள் பேசப்படுகின்றன.
உலக அளவில் பீர் வகை பானங்களில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவு 5 விழுக்காடு. ஆனால், இந்திய மதுபானங்களில் இந்த அளவு மீறப்படுகிறது. சில பீர் பாட்டில்களில் 8 விழுக்காடு ஆல்கஹால் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் சொல்லப்படாத அளவாக 15 விழுக்காடு வரை ஆல்கஹால் உள்ளது. இது ஏறக்குறைய அந்நிய மதுபானம் தரும் போதையைத் தருகிறது. இதற்குப் பழகியபின்னர் இவர்கள் அந்நிய மதுபானத் தயாரிப்புகளுக்குத் தாவி விடுகிறார்கள்.
பிளஸ் 2, கல்லூரி மாணவர்கள் குடிப்பதால் அவர்கள் படிப்பு நிச்சயமாகப் பாதிக்கப்படும். ஏனென்றால், ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்கிறது. அதுதான் போதை என கூறப்படுகிறது. 15 வயது வளர்இளம் பருவத்து இளைஞன், பீர் என்று நினைத்துக்கொண்டு அதிக ஆல்கஹால் கலந்திருக்கும் மதுபானத்தைக் குடிப்பதன் மூலம் மூளையின் செல்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் வளர்ச்சி தடைபடுகிறது. ஆகவே, அவன் படிக்கும் திறன், மனதில் பதியவைக்கும் நினைவாற்றல் குறைகிறது.
டாஸ்மாக் தரும் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பீர் உற்பத்தியும் அந்நிய மதுபான உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.
2007-08; 2008-09; 2009-10 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பீர் உற்பத்தி 15.8; 17.11; 18.66 கோடி லிட்டராக உள்ளது. அதேபோன்று அந்நிய மதுபான உற்பத்தி இதே காலகட்டத்தில், 27; 31.08; 36.66 கோடி லிட்டராக உள்ளது. ஆண்டுதோறும் பீர் உற்பத்தியைவிட அந்நிய மதுபான உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம்.
இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததுமே ஏதோ விமானத்தை ஒட்டுவது போன்ற உணர்வுக்குத் தாவிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இவர்கள் குடித்துவிட்டும் வாகனம் ஒட்டினால்? இன்றைய விபத்துகள் 90 சதவீதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நிகழ்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆயுள் காப்பீட்டுப் பணம் கிடைக்காது என்கிற காரணத்துக்காகவும், ஓட்டுநர் உரிமம் ரத்தாகாமல் இருக்க காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்தும் இதை மறைத்து வருகிறார்கள் என்பதே நிஜம்.
ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாயை இழக்க எந்த அரசும் முன்வராது. ஆகவே மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு மது, பீர் விற்பனை கிடையாது என்பதையும், இதை மீறி அவர்கள் பீர் குடித்தாலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலும் அதிகபட்ச அபராதம் இல்லையென்றால் ஒரு வாரம் சிறைத் தண்டனை என்று சட்டம் திருத்தப்பட்டால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். அபராதத்துக்குப் பயப்படாவிட்டாலும் சிறைத் தண்டனை என்கிற சமுதாய இழுக்குக்காவது நிச்சயம் பயப்படக்கூடும்.
அப்படியொரு நிலைமையை தமிழக முதல்வர் நினைத்தால் உருவாக்க முடியும். 1991-ல் முதல்முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது, இன்றைய முதல்வர் ஜெயலலிதா, சமூகப் பொறுப்புடன் கையொப்பமிட்ட முதல் உத்தரவே சாராயக் கடைகளை இழுத்து மூடுவதற்காகத்தான். மதுவுக்கு எதிரான அவரது கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க அவர் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இளைஞர் நலன்கருதி, பெற்றோரின் கவலையை உணர்ந்து இதை அமல்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment