|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 June, 2011

இன்று கூர்ம ஜெயந்தி!

நம்மை விட வயதில் மூத்தவர்களிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் தாத்தாக்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும். இல்லாவிட்டால், இந்திரனுக்கு ஏற்பட்ட கதி தான் அவ்வாறு பேசுவோருக்கும் ஏற்படும். முனிவர்களில் மகா பெரியவரான துர்வாசர், வைகுண்டம் சென்று, மகாலட்சுமியிடம் பெற்ற மாலையை, யானை மீதேறி வந்த இந்திரனிடம் அளித்தார். பெரியவர்கள் பிரசாதம் கொடுத்தால், கண்ணில் ஒற்றி, வாங்கிக் கொள்ள வேண்டும்; குறிப்பாக, மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ஆணவம் பிடித்த இந்திரன், அதை கழுத்தில் அணியாமல், யானையின் மத்தகத்தில் வைத்தான். யானை, தன் குணத்துக்கேற்ப அதை எடுத்து, காலில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசருக்கு கடும் ஆத்திரம். மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டு விட்டார். இந்திரன் பதறிப் போய் அவரது காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டு கொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது; அரக்கர்களின் ஆதிக்கம் ஓங்கியது. இதுபற்றி, பிரம்மாவிடம் தெரிவித்தான் இந்திரன். அவர், மகாவிஷ்ணுவிடம் விஷயத்தைச் சொன்னார்.

அவரிடம், இந்த பிரச்னை தீர, தேவர்கள் வலிமை பெற்று, அரக்கர்களை ஒடுக்கி வைக்க வேண்டும். அதற்கு, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது சாதாரணமானதல்ல. அரக்கர்களுடன் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் கடலைக் கடைய அழைக்க வேண்டும். அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்... என்றார் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் யோசனைப்படி, பாற்கடலைக் கடைய மேருமலையையே மத்தாக பயன்படுத்தினர். மத்தை இழுக்கும் கயிறாக மாற, வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை, வெளிக்காட்டும் வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்து கடலைக் கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது. உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி, கடலுக்குள் சென்றார். தன் வலிமையைப் பயன்படுத்தி, மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். பின்னர் தேவாசுரர்கள் எவ்வித சிரமமுமின்றி கடலைக் கடைந்தனர். வலி தாங்காத பாம்பு விஷத்தைக் கக்க, அதை சிவபெருமான் எடுத்துக் கொண்டார். பார்வதிதேவி அவரது கழுத்தைப் பிடிக்கவே, அது கழுத்தில் தேங்கி, நீலகண்டன் என்று பெயர் பெற்றார். கண்டம் என்றால், கழுத்து! நீல நிறமுள்ள விஷத்தைக் கழுத்தில் கொண்டவரே நீலகண்டன். ஒருவழியாக அமிர்த கலசம் வெளியே வந்தது. அதை, தேவர்களுக்கு முதலில் கொடுத்த விஷ்ணு, அசுரர்களை மோகினி வடிவெடுத்து மயக்கி ஏமாற்றி விட்டார். தேவர்கள் சாகா நிலை பெற்றனர். பின்னர் எளிதாக அவர்கள் அசுரர்களைத் தோற்கடித்தனர்.

ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து... என்கிறார் வள்ளுவர். இந்த அரிய தத்துவத்தை ஆமை அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே, கூர்மம்! ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கு கோவில் இருக்கிறது. இவரை, கூர்மநாதர் என்கின்றனர். மூல ஸ்தானத்தில், ஆமை வடிவில் இருக்கிறார் பெருமாள். ஒரு பெரியவரை அவமதித்ததால் ஏற்பட்ட பலன்களைக் கவனித்தீர்களா! இனியும், நம் பெரியவர்களை, யோவ் பெருசு என்று கேலியாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசக் கூடாது. நல்ல நாட்களிலும், இன்டர்வியூ முதலான முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்லும் போதும், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். பெரியவர்கள் அவமதிக்கப்படும் நாடு நன்றாக இருக்காது என்பதைப் புரிந்து, இனியேனும் நடந்து கொள்வோம்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...