|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 July, 2011

110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி! 153 கல்லூரிகளில்!!

சென்னை அண்ணா பல்கலை வெளியிட்ட, 153 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில், 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 15 கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் பத்துக்குள் தான் இருக்கின்றன. போதிய உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது தான், தேர்ச்சி சதவீதம் சரிவதற்கு, முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளில் சேர்வதிலிருந்து தப்பிக்க, சேர்வதற்கு முன், கல்லூரிகளைப் பற்றி மாணவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.

இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.

எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.

மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...