|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 July, 2011

4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால், கேஸ் விலை ரூ.800!!

ஆண்டுக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டருக்கு மேல் வாங்குவோர், ஒவ்வொரு கூடுதல் சிலிண்டருக்கும் இனி ரூ.800 விலை தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.393.50 எனவும் மற்ற மாநிலங்களில் தூரத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.400 எனவும் விற்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை 3 வாரங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளலாம்.கிராமங்களில் கூட கேஸ் சிலிண்டர்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

சிலிண்டர் ரூ.800 மத்திய அரசு சமீபத்தில் கேஸ் சிலிண்டர் விலை உள்பட எரிபொருள்களின் விலையை உயர்த்தியது. ஆனாலும் இந்த எரி பொருட்களுக்கு மானியமாக மிகப்பெரிய தொகையை வழங்கி வருகிறது. 2009-10-ம் ஆண்டில் கியாஸ் சிலிண்டருக்கு மட்டும் மத்திய அரசு மானியமாக ரூ.12,000 கோடி வழங்கியுள்ளது. இது இந்த ஆண்டு மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த மானியத் தொகையை ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே இந்த மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வருடத்திற்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் (அதாவது சராசரி ரூ.400-க்கு) வழங்கப்படும். அதற்கு மேல் அந்த வருடத்தில் வாங்கும் கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.800 ஆக இருக்கும். அதாவது மானியம் ஏதுமின்றி அன்றைய வெளிமார்க்கெட் விலையில் அந்த சிலிண்டர்கள் விற்கப்படும்.

ஏழைகளுக்கு உதவித்தொகை வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் இதே முறை தான் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்களும் வருடத்திற்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலைக்கு வாங்க முடியும். அதற்கு மேல் ரூ.800 கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆனால் அவர்கள் கேஸ் இணைப்பு பெறுவதற்கு மட்டும் மத்திய அரசு ரூ.1400 உதவித் தொகையாக வழங்கும்.

வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு 4 சிலிண்டர் போதுமானது என்று பெட்ரோலிய இலாகா கருத்து தெரிவித்துள்ளது. காரணம் இவர்கள் ரேஷன் மூலம் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மேலும் மண்எண்ணெய், விறகு, சாணத்தில் இருந்து தயாராகும் வறட்டி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எதிர்ப்பு இருப்பதால் இத்திட்டம் அமலுக்கு வர சற்று காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய திட்ட கமிஷன் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...