ஈழத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அறிவித்துள்ளது.இந்த பரிந்துரையை ஏற்று அவர் மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை ஆதரித்தும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்திலும், பிற மாநிலங்களின் தலைநகரங்களிலும் நாளை (8-ம் தேதி) நடைபெறவிருக்கும் இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜூலை 8 இயக்கத்தில் சேர சீமான் கோரிக்கை: ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு அவர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் நாளை (8-ம் தேதி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுக்கும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு இன்று வரை மதிக்கவில்லை.
டெல்லியில் நேற்று இலங்கை, மாலைத் தீவு நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், “இந்தியாவின் நட்பு நாடான இலங்கை, ஒற்றையாட்சியின் கீழ் வலிமையாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது” என்றும், “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அந்நாட்டு அரசு உருவாக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம், ஆனால் அதற்காக எந்த விதத்திலும் இலங்கை அரசை நிர்பந்திக்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.
இது இந்திய அரசின் இலங்கைக்கு ஆதரவான நட்புப் போக்கு மாறவில்லை என்பதை காட்டுவது மட்டுமின்றி, அது தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது என்பதற்கும் அத்தாட்சியாகும். அது மட்டுமல்ல, இன்று வரை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் கூறவில்லை.
இது இலங்கை அரசின் தமிழினப் படுகொலையில் தன் பங்கை மறைக்க முயற்சிக்கிறது என்பதற்கும், அதற்காக அது இலங்கை அரசைக் காப்பாற்ற முற்படுகிறது என்பதற்கும் சான்றாகும். ஆகவே, ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு அப்பாலும் வாழும் மக்களின் ஆதரவு அவசியமாகிறது.
இந்த நோக்கில் நாடு தழுவிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் வெள்ளியன்று நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி, பொதுக் கூட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளை அக்கட்சி நடத்தவுள்ளது.
சென்னை தங்கசாலையில் அக்கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதேபோல் திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கும் இயக்கங்களில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த இயக்கங்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசுக்கு வலிமையான ஒரு செய்தியை விடுப்போம்.
No comments:
Post a Comment