தி.மு.க., என்ற எக்கு தூணை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது,'' என்று கருணாநிதி கூறினார்.
கோவையில்
நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தலில்
மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக்
கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம். யாரால்
இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை.
இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.ஏனென்றால், நான்,
அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம்.
தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக்
கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்கவில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட
வேண்டும் என்பதற்காக துவக்கினோம். ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக்
கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது. இருந்தாலும்,
இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு
கிடைத்திருக்கும் தோல்வி. அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என,
முழங்கிக் கொண்டு உள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும்
நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது. நமது லட்சியங்கள்,
கொள்கைகளுக்கு வெற்றி தரக்கூடிய வெற்றியைப் பெறுவோம்.தி.மு.க.,
நிர்வாகிகள், தொண்டர்கள் தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக
இருக்கின்றனர். அப்படியிருந்தாலும், அரங்கு நிரம்பி வழிகின்ற அளவிற்கு
செயற்குழுவுக்கு வந்துள்ளனர்.தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ
யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை,
போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்.இவ்வாறு
கருணாநிதி பேசினார்.
சும்மா விட்ருவோமாய்யா...தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பேசிய சிலர், "2ஜி' ஊழலும், குடும்ப ஆட்சியும் தான், கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ஆவேசமாக பேசினர். முக்கிய தலைவர்களால், "2ஜி' குறித்து ஆழமாக பேச முடியவில்லை; காரணம், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியும் செயற்குழுவில் பங்கேற்றிருந்தார். வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், ""என்னை தேடப்படும் குற்றவாளியாக கருதிய போதும், கட்சி சார்பில், இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. கட்சியை சேர்ந்த ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளி வருகின்றனர். எங்களை பாதுகாக்க, கட்சி என்ன செய்தது. இதற்கெல்லாம் விரைவாக முடிவு எடுக்காவிட்டால், கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும்,'' என்றார்.கருணாநிதி, ""சும்மா விட்ருவோமாய்யா,'' என ஆறுதல் தெரிவித்தார்.வெளியே காத்திருந்த தொண்டர்கள் பேசுகையில், "கட்சியை பற்றி, அடிமட்ட தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்; மாவட்ட செயலர்களை அழைத்து, அவர்களிடம் கேட்காதீர்கள். குடும்ப ஆட்சி நடத்தி தானே தோற்றுப் போனோம்,'' என, ஆதங்க குரல் எழுப்பினர். கட்சி, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இன்று நடக்கும் பொதுக்குழுவில், தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment