|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 July, 2011

மகன்களை மாடாக்கிய தந்தை!


அமராவதி: நாட்டில் ஊழல், ஆட்சி அதிகாரம் என்று தான் பேசி வருகின்றோமே, வறுமையை ஒழிக்கவும் ஏழைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் யாரும் முழு யோசனை கூற முன்வருவதில்லை. அடிப்படை விஷயங்கள் ஆராய்ந்தும், ஏழ்மையில் வாழும் நபர்கள் குறித்து கணக்கெடுத்து அதற்கேற்ப அரசு செயல்பட்டால் நாட்டில் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது. இருப்பினும் இந்திய நாடு வறுமையில் இருந்து மீளவில்லை என்பதை காட்டும் வகையில் மகன்களை மாடாக மாற்றிய கொடிய சம்பவம் நடந்திருக்கிறது மகாராஷ்ட்டிராவில்.

அமராவதி மாவட்டத்தில் சீர்கேட் என்ற கிராமத்தில் வசிப்பவர் கிஷன்ராவ் தபூர்கர். இவர் ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் வைத்திருக்கிறார். ஆனால் சமீப கால இயற்கை பொய்த்த காரணமாக கடும் வறுமையில் வாடியிருக்கிறார். சமீபத்தில் மழை பெய்ததை அடுத்து அவரது நிலத்தை பதம் செய்ய துவங்கினார். முதல் கட்டமாக நிலத்தை உழுவதற்கு காளை மாடுகள் இல்லை. என்ன செய்வது தனது 2 மகன்களையும் ஏரில் பூட்டி நிலத்தில் களம் இறக்கி உழவுப்பணியை துவக்கியுள்ளார்.

இந்த விஷயம் லோக்கல் பத்திரிகைகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. காளை மாடுகள் வாங்கும் அளவிற்கு எங்களுக்கு போதிய பணம் இல்லை, இதனால் எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை என்கின்றனர் மகன்கள் சோகத்துடன். நாள் ஒன்றுக்கு 2 காளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கின்றனர், விலைக்கு வாங்க வேண்டுமென்றால் ரூ 20 ஆயிரம் தேவைப்படும் என்ன செய்வது நாங்கள் மாடாக உழைக்கிறோம் என்று முடித்துக்கொண்டனர்.

8 ஏக்கர் நிலம் இருந்தாலும் இந்த குடும்பம் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ் தான் வாழுகிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து இவருக்கு தேவையான வசதி செய்து கொடுக்க உள்ளூர் நிர்வாகம் முன்வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்தாலும் சாதி அடிப்படையில் இவர்களுக்கு காளை மாடுகள் அரசு சார்பில் வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...