|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 August, 2011

ஜீரணம் தரும் களாக்காய்!

எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. தடிப்பான பச்சை இலைகளையுடையது. வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

ஆரோக்கியம் தரும் காய்: களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

பித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ஊட்டசத்துமிக்க களாக்காய் இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

கண்நோய் தீரும்: தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

ஜீரணம் தரும் களாக்காய்: காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும். களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

கருப்பை அழுக்கு தீரும்: வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை,மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...