திருக்கோவிலூர்
கம்பர் வழிபட்டதாகக் கூறப்படும் காளிதேவி கோயிலில் இப்போது அடிப்படை
வசதிகள் எதுவும் இல்லை. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை
எடுக்கவேண்டுமென பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.திருக்கோவிலூரை அடுத்த திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த
காங்கேயன் எனும் வேளாளருக்கு மகனாக பிறந்தவர் சடையப்பர். இளமையிலேயே அரச
குமாரனைப்போல வளர்க்கப்பட்டார். கடையெழு வள்ளல்களாகத் திகழ்ந்த எழினி,
காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன் அதியமான் போன்ற வள்ளல் தன்மை
மிக்கவர்களுக்கும் மேலாக கருணையும், எல்லா உயிர்களையும் தம்முயிர் போல்
நினைத்துப் போற்றும் இதயமும் கொண்டு வாழ்ந்தார் அவர். இதில்
குறிப்பாக வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலை தரும்படி தேரழுந்தூரில்
இருந்து வந்த கம்பரையும் கம்பருடைய தாயாரையும் தெருவாயிற்படியில் கண்ட
சடையப்ப வள்ளல், தம்முடைய இரண்டு கண்களும் கண்ணீர் பெருக்கெடுக்க அந்த
அம்மையாரைத் தனது தாய் போலவும், சிறுவன் கம்பனைத் தன்னுடைய தந்தையைப்
போலவும் நினைத்து அவர்களை உள்ளே அழைத்து கொண்டுபோய் உபசரித்து தன்னுடைய
மாளிகையிலேயே தங்கவைத்துக் கொண்டார். சடையப்ப வள்ளல் அதிகாலையில்
எழுந்து தனக்குச் சொந்தமான வயல்வெளிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு
வருவது வழக்கம். காலையில் வீட்டிலிருந்து கிளம்பியதும் ஊருக்கு மேற்கில்
அமைந்துள்ள ஏரியில் இறங்கிக் குளித்து விட்டு, ஏரியில் வடமேற்கில்
குடிகொண்டிருக்கும் காளிதேவியை மனம் உருக வேண்டி பிராத்தனை செய்துவிட்டு
வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்கு வருவார். கம்பரும் அவருடைய
தாயாரும் வள்ளலின் வீட்டில் குடியேறியது முதல் சிறுவன் கம்பனுடைய
சுறுசுறுப்பையும், அறிவாண்மையும் கண்டு வியப்படைந்த வள்ளல், கம்பன் மீது
தனி கவனம் செலுத்தினார். தினமும் காலையில் வள்ளல் வயல்வெளிக்குச் செல்லும்
போது கூடவே கம்பனையும் அழைத்துக்கொண்டு போவதை வழக்கமாக்கிக் கொண்டார். அதிகாலையில்
வீட்டில் இருந்து கிளம்பியதும் இருவரும் வயல்வெளியைப் பார்த்துக் கொண்டே
போய் ஏரி நீரில் குளித்து விட்டு நேராக காளிதேவி கோயிலுக்குப் போய்
இருவரும் அம்பாளை வழிபடுவார்கள். முதல்நாள் வழிபாட்டின்போதே அம்பாளின்
சக்தியும், பார்வையும், கருணையும், கம்பனின் மீது பதிவு
செய்யப்பட்டுவிட்டது. அப்போதே கம்பனுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஆற்றல்
தோன்றியது. அதுமுதல் தினம் தினம் தவறாமல் இருவரும் காளியை தரிசனம் செய்து
கொண்டு வந்தார்கள். தக்க பண்டிதர்களைக் கொண்டு கம்பனுக்கு முறையான கல்வி
கற்றுக்கொடுக்க வழி வகுத்துக் கொடுத்தார் சடையப்ப வள்ளல். கல்வியிலும்
கேள்வியிலும் சிறந்து விளங்கிய கம்பன் தமிழ், சமஸ்கிருதம் முதலிய மொழிகளை
கற்றுத் தேர்ந்ததுடன் கவிபாடும் திறமையையும் பெற்றார். வடமொழியில்
வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமனுடைய கதையை தமிழில் மொழி பெயர்த்துச்
சொல்லும்படி வள்ளல் கேட்க, அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து
சொல்லுவார். சடையப்ப வள்ளலுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. வடமொழி
தெரியாத தனக்கு கம்பன் சொல்லித்தானே கேட்கின்றோம். அதை ஏன் தமிழ் மொழியில்
மொழி பெயர்க்கக் கூடாது தமிழில் மொழி பெயர்த்தால் நாமே படித்து பரவசமடைவோமே
தனக்கு மட்டும் அல்லாது தமிழ் பேசும் மக்களும் நேரடியாக படித்து தெரிந்து
கொள்ளலாம் என்பதையும் எண்ணினார். ஒருநாள் வள்ளலும் கம்பரும்
காளிதேவியை தொழுதுகொண்டு இருக்கும்போது தன்னுடைய மனதில் பதிந்திருந்த
எண்ணத்தையெல்லாம் கம்பரிடம் இராமகதையை தமிழில் எழுதும்படி
கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டவுடன் தாங்கள் இஷ்டப்படியே செய்வேன்,
தங்களுக்கு எல்லா விதத்திலும் நான் கடமைப்பட்டவன். ஸ்ரீமந்
நாராயணனுடைய அவதாரமாகிய இராமபிராணின் சரிதத்தை ஸ்ரீமந் நாராயணனின் தங்கையான
இந்த அந்தரியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜைபோட்டு தொடங்கி வையுங்கள் என்று
வள்ளலைக் கேட்க, அவரும் அதே நேரம் அம்பாள் சந்நிதியிலே பூஜை போட்டு இராம
கதையை எழுவதுவதற்கு கம்பபரை ஆசிர்வதித்தாராம். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் தற்போது எவ்வித அடிப்படை வசதிகளற்ற
நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக சின்னசெவலை கிராம எல்லையில்
வயல்வெளிகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச்
செல்லும் வகையில் சாலை வசதி கிடையாது. இதனால் வயல்வெளி வரப்புகளின்
மீதுதான் நடந்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும்
சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி சாலை வசதியை ஏற்படுத்திடவும்,
திருக்கோவிலூர்-திருவெண்ணைநல்லூர் பிரதானச் சாலையில் உள்ள இவ்வூர் பிரிவு
சாலையில் கம்பர் வழிப்பட்ட காளிதேவி கோயில் குறித்து வழிகாட்டி விளம்பர
பலகை வைப்பதற்கும், இக்கோயிலுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும்
அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment