|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 August, 2011

லோக்பாலுடன் எனது போராட்டம் நிற்காது அன்னா ஹசாரே!


எனக்கென்று, தனிப்பட்ட குடும்பம் எதுவும் இல்லை. இந்த நாடும், மக்களுமே என் குடும்பம். லோக்பாலுடன் எனது போராட்டம் நின்றுவிடாது. இதில், வெற்றியடைந்துவிட்டு, இன்னும் பல போராட்டங்களை கையில் எடுக்கத் தான் போகிறேன். விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர்கள் பிரச்னை, தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவைக்காக, அடுத்து களம் இறங்குவேன்'' என்று, அன்னா ஹசாரே தெரிவித்தார்.வலுவான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்திட வலியுறுத்தி, காந்தியவாதியான அன்னா ஹசாரே, டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, இரண்டு நாட்கள் திகார் சிறையில் உண்ணாவிரதம் இருந்த அவர், அதன் பின் ராம்லீலா மைதானத்திற்கு வந்து, தன் உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மேடை அமைத்து, அதில் அன்னா ஹசாரே மட்டும் அமரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரை, அவ்வப்போது பரிசோதனை செய்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், மேடையிலிருந்தபடியே சில நிமிடங்கள் உரையாற்றிய ஹசாரே கூறியதாவது:
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறோம். இந்தப் போராட்டம், இத்துடன் நிறைவடைந்து விடும் என்று, யாரும் நினைக்க வேண்டாம். அரசாங்கத்தின் தவறான கொள்கைகள், நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்ப்பதற்கான ஒரு ஆரம்பமே இது.

லோக்பால் மசோதாவுடன், எனது போராட்டம் நின்று விடும் என, நினைக்காதீர்கள். மக்களை வாட்டி எடுக்கும், இன்னும் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம் கையில் எடுக்கத் தான் போகிறேன். அரசாங்கத்தை எதிர்த்து, மற்ற பிரச்னைகளுக்காக இந்தப் போராட்டத்தை, இளைஞர் சக்தியுடன் நிச்சயம் விரிவுபடுத்துவேன்.குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு, நிறைய சங்கடங்களும் சிக்கல்களும் உள்ளன. தேர்தல் நடைமுறைகளில், பெரும் சீர்திருத்தம் கொண்டு வரப் பாடுபடுவேன். தற்போது, 10 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால், அவர்களில் பாதிப் பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர். மீதிப் பேர் ரவுடிகளாக உள்ளனர்.

இவர்கள், மக்களை மதிப்பது இல்லை. இவர்களுக்கு, ஓட்டுப் போட வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. இவர்களில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்றால், அதற்கும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.பெரும்பாலான மக்களின் ஓட்டுக்களை வாங்காமலேயே, ஆட்சிக்கு வந்து அதிகாரம் செய்யும் போக்கே, தற்போது காணப்படுகிறது. இதை, தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமே, சரி செய்ய முடியும்.

விவசாயிகளின் வயிற்றில், அரசாங்கம் அடிக்கிறது. அவர்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது. இதனால், விவசாயிகள் நாடு முழுவதும் குமுறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் நிலத்தை விற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, அந்தந்த கிராம சபைகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்க வேண்டும். வீட்டோ அதிகாரத்தை, கிராம சபைகளுக்கு அளித்தால் தான், இவ்விஷயம் சரிப்படும். இதற்காகவும் களம் இறங்கக் காத்திருக்கிறேன்.

அதேபோல, தொழிலாளர்கள் பிரச்னை, நாடெங்கும் வாட்டி வதைக்கிறது. குறைந்த ஊதியத்தை வழங்கி விட்டு, தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். பல நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களையே மதிப்பதில்லை. அரசாங்கமும் தட்டிக் கேட்பதில்லை. இந்த அவலத்திற்காகவும், குரல் கொடுப்பேன்.எனக்கென்று, தனிப்பட்ட குடும்பம் எதுவும் இல்லை. இந்த நாடும் மக்களும் தான் எனக்கு எல்லாமே. அவர்கள் தான், எனக்கு குடும்பம். எனவே, என் குடும்பத்திற்காகப் போராடுவதில் இருந்து, பின்வாங்கப் போவதில்லை.
இவ்வாறு, அன்னா ஹசாரே பேசினார்.

மழையால் பாதிப்பு* ஹசாரேக்கு என, தனியாகப் படுக்கை, தலையணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காற்றாடி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
* அவர், அவ்வப்போது படுத்துக் கொள்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம், கூட்டத்தினரைப் பார்த்து, கையசைத்து உற்சாகப்படுத்துகிறார்.
* டில்லியில் பெய்யும் மழை காரணமாக, ராம்லீலா மைதானம், சேறும் சகதியுமாக இருப்பதால், அந்த இடத்தைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*டில்லி மாநகராட்சி பா.ஜ., வசம் உள்ளதால், இதற்கான ஏற்பாடுகள், ஜரூராக நடைபெற்று வருகின்றன.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அங்கிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து வருகின்றன.
* மைதானம் முழுவதுமே தேசியக் கொடியும், நாட்டுப்பற்றுடன் கூடிய பாடல்களும், வந்தே மாதரம் மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்களுமாகவே இருக்கின்றன.
* குடிநீர் மற்றும் சுகாதார வசதி, சரிவர செய்யப்படாததால், போராட்டத்தில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டதாக, அங்கு இருந்த மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர்.
* மைதானத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு, தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது.
* அதிகாலை 3 மணிக்குத் தான், மைதானத்துக்குள் உணவு வினியோகம் செய்யப்பட்டது.
* போலீசாரும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களும், பசியுடன் இருந்ததால், அந்த உணவுகளை வாங்கி, ஆர்வமாகச் சாப்பிட்டனர். உணவு நன்றாக இருப்பதாக, போலீஸ் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
* மேடையின் முன்பாக, போலீசாரால் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா, மேடை நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, "டிவி' கேமராமேன்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
* மைதானத்தில், ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருந்தால், உடனடியாக, அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
* பேச்சாளர்கள் பலரும், மைக்கில் பேசிக் கொண்டே உள்ளனர். இடையில், நாட்டுப் பற்றுடன் கூடிய பாடல்களை, பல்வேறு இளைஞர்களும் குழுவினரும் பாடியபடி உள்ளனர்.

நாடு முழுவதும் போராட்டம்:

* ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆமதாபாத், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., மாணவர்கள், "ஆன்-லைன்' மூலம், மனு அளிக்கும் பிரசாரத்தைத் துவக்கியுள்ளனர்.
*ஹசாரேயின் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார்.
* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மும்பை புறநகர் ரயில்களில், ஜன் லோக்பால் குறித்து, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
* உ.பி., மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக, நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
* அந்தமான், போர்ட் பிளேரில் உள்ள, ஜவஹர்லால் நேரு ராஜ்கீயா மகாவித்யாலயா கல்லூரி மாணவர்கள், ஊழலுக்கு எதிராக, நேற்று பேரணி நடத்தினர்.

* பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

* ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறைக் கைதிகள் 50 பேர், ஊழலுக்கு எதிராக, நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

""ஊழலுக்கு எதிராக, மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்துள்ளது. மக்களின் கோபத்தைப் புறக்கணித்து விட்டு, இறுமாப்புடன் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது. பார்லிமென்டின் மற்ற அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, கூடிய விரைவில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...