|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 August, 2011

ஆதரவு பெருகுகிறது..கவலையில் மத்திய அரசு!

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு பேராதரவு பெருகி வருவதால் மத்திய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நடத்தினால் அவருக்கு ஆதரவு பெருகும் என்ற உளவுப் பிரிவினரின் எச்சரிக்கையையடுத்து அவரை முன் கூட்டியே அரசு கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதனால் மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்தது. இதையடுத்து அன்னாவின் நிபந்தனைகளை ஏற்று அவரை விடுவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

நேற்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் உண்ணாவிரத மேடைக்கு வந்தபோது அவருடன் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் ஊர்வலமாக வந்தனர். இதனால் கொட்டும் மழையில் அவர் ராம்லீலா மைதானம் வந்து சேரவே 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதையடுத்து நேற்று முழுவதும் அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். இரவிலும் விடிய விடிய ராம்லீலா மைதானத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந்தனர்.

இன்று அவரது உண்ணாவிரதம் 2வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தாலும் மக்களிடையே மிக எழுச்சியுடன் பேசி வரும் அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதனால், அவரை ஒடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு அரசதள்ளப்பட்டுவிட்டது.

அடுத்த 15 நாட்களுக்குள் தாங்கள் உருவாக்கிய லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும். தேவைப்பட்டால் அதற்கு மேலும் தொடரும் என அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்,

அவருக்கு பாஜக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந் நிலையில் ராம்தேவை நள்ளிரவில் இழுத்துச் சென்றது போல ஹசாரேவிடம் அடாவடியாக நடந்து கொண்டால், மக்களிடம் கெட்ட பெயர் இன்னும் அதிகமாகிவிடும் என்பதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த பொறுமையைக் கையாண்டு வருகிறது.

புதிய முயற்சிகள் மூலம் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஹசாரே குழுவில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய, குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அன்னா குழுவினர் உருவாக்கிய மக்கள் லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்புவது அல்லது நிலைக் குழுவின் முன்பு தனது மசோதா பற்றி எடுத்துக்கூற அன்னாவுக்கு அழைப்பு விடுப்பது போன்ற யோசனைகள் பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

அரசு அழைத்தால் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி லோக்பால் குறித்து விளக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அப்போது மத்திய அரசு உருவாக்கிய லோக்பால் மசோதாவை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைப்போம் என அன்னாவின் குழுவில் உள்ள அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார். பிரதமர், நீதிபதிகள், அரசு ஊழியர்களை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதில் இரு தரப்பிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மக்களிடையே பேசிய அன்னா ஹசாரே, நான் இறந்து போனாலும் கூட, எனது ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும். வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1942ல் அவர்களை எதிர்த்து மகாத்மா குரல் கொடுத்தார். .ஆனால், இப்போது நாம் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் வேறு. இவர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். மக்கள் சக்தியை, அரசாங்கம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் முடிவில் நான் உயிரோடு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஒருவேளை நான் மறைந்து போனாலும்கூட, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும் என்றார்.

ஜன்லோக்பாலை ஏற்கமுடியாது: சட்ட அமைச்சர் சல்மான்: இந் நிலையில் அண்ணா ஹசாரே குழு தயாரித்தளித்த ஜன் லோக்பால் மசோதாவை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

வரும் 30ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தான் தயாரித்தளித்த லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஹசாரேவின் நிபந்தனையை ஏற்க முடியாது என்றும், தற்போது அரசு லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்வது இயலாத காரியம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...