|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 September, 2011

செருப்புக் கடைக்காரர் பெயரில் தனது மகனுக்கு பைக் வாங்கினார் அசாருதீன்!

அசாருதீனின் இளைய மகன்அயாசுதீனின் உயிரைப் பறித்த சூப்பர் பைக், செருப்புக் கடைக்காரர் ஒருவரின் பெயரில் வாங்கப்பட்டுள்ள விவரம் தற்போது கிடைத்துள்ளது.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000 என்ற இந்த சூப்பர் பைக்கில் அதி வேகமாக சென்றுதான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் அயாசுதீன். இந்த கோர விபத்தில் அவரது அத்தை மகனும் உயிரிழந்து விட்டார். அயாசுதீனுக்கு வயது 19 தான் ஆகிறது. தந்தையைப் போலவே சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி வந்த நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளார் அயாசுதீன். விபத்தில் இறந்த அயாசுதீனின் அத்தை மகனுக்கு வயது 16தான் ஆகிறது. இரு இளம் குருத்துக்களை இழந்த சோகத்தில் அசாருதீன் குடும்பமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் விபத்துக்குக் காரணமாக அந்த பைக்கை ஒரு செருப்புக் கடைக்காரர் பெயரில் அசாருதீன் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வருமான வரித்துறையினர் விசாரணையில் குதித்துள்ளனர்.
இந்த பைக்கை ஜப்பானின் நகோயா நகரிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியுள்ளனர். டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள பிட்டூ பைக் வாலா என்ற டீலரிடமிருந்து பைக் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை 88 சதவீத வரிகள் உள்பட ரூ. 5.27 லட்சமாகும்.

பிட்டூ பைக்வாலாவிடமிருந்து ஹைதராபாத், மல்லபள்ளியைச் சேர்ந்த சையத் அத்தர் அலி என்பவர் பைக்கை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். கடந்த 2010, டிசம்பர் 23ம் தேதி பைக் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ. 13,12,649 கொடுத்துள்ளார். அத்தர் அலி, கான்பூரைச் சேர்ந்தவர். இவர் அசாருதீனின் குடும்ப நண்பர் ஆவார். இவருக்கு அகாபுராவில் நோபிள் புட்வேர் என்ற ஷூ மற்றும் செருப்புக் கடை சொந்தமாக உள்ளது.

அசாருதீன் மகன் ஓட்டிச் சென்ற பைக் இன்னொருவருடையது என்ற தகவல் வெளியானதும் வருமானவரித்துறையினர் தற்போது விசாரணையில் குதித்துள்ளனர். வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக தனது மகனுக்கு வேறு ஒருவரின் பெயரில் பைக் வாங்கினாரா அசார் என்று விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையே, போலீஸாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பைக்கை விற்ற டீலரிடம் அவர்கள் விசாரித்தபோது தனது மகனுக்காக அசாருதீன்தான் இந்த பைக்கை வாங்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து அத்தர் அலி வீட்டுக்குப் போலீஸார் சென்றபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து பைக்குக்கான ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அவருக்கு போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.

செருப்புக் கடைக்காரர் பெயரில் தனது மகனுக்கு பைக் வாங்கினார் அசாருதீன் என்ற புதிய தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...