|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2011

ராஜபக்சேவுக்கு 'தமிழ்நெட்' மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம்!


அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்சே தொடர்ந்து வாங்க மறுத்ததால், அதனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் மகிந்த ராஜபக்சே மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும் அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சேவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்குகளுக்கு தமிழர்கள் சார்பில் ஆஜராகும் புரூஸ் பெஃயின் யோசனையின்படி புதிய உத்தரவொன்றை அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோடெல்லி பிறப்பித்துள்ளார்.

டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு போர்க்குற்ற வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது உறவினர்களை சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக ராஜபக்சேயின் உத்தரவுப்படி ராணுவம் கொன்றுவிட்டதாக வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் அதனை ஏற்க மகிந்த ராஜபக்சே மறுத்துவிட்டார். எனவே இது தொடர்பான கடிதங்கள் மற்றும் சம்மனை திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த சம்மனை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.  அமெரிக்க சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். 

ஆனால் ராஜபக்சே இதனை அறிய மறுப்பதால், இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை முதல்பக்கத்தில் விளம்பரமாக பிரசுரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்கும் வகையில் இந்த உத்தரவு இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.

இதன்படி ராஜபக்சேவுக்கு எதிரான சம்மனை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரித்துள்ளன. இதன் மூலம் ராஜபக்சே மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஆஜராகி அல்லது தன் சார்பில் வழக்கறிஞர் வைத்து அவர் தனது விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும். ஒருவேளை அவர் இதையும் கண்டுகொள்ளாமல் விட்டால் பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். உண்மையில் இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவே ராஜபக்சே திட்டமிட்டார். ஆனால் ப்ரூஸ் பெயினின் இந்த புதிய திட்டம் காரணமாக இனி தப்ப முடியாது எனும் அளவுக்கு சிக்கலில் மாட்டியுள்ளார் ராஜபக்சே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...