முல்லை பெரியாறு அணை விஷயத்தில், கேரள காங்கிரஸ் அரசின் முதல்வர் உம்மன் சாண்டியும், முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனும், ஒரே குரலில் தமிழகத்திற்கு எதிரான பிரசாரங்களை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் நிலைமைக்கு மாறாக, வழக்கமான அரசியல் கொள்கைப்படி, தமிழக கட்சிகள் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து, அரசியல் நடத்துகின்றன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதி அளித்த, மத்திய அரசை எதிர்த்து, வணிகர் சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து, ஒரு நாள் கடையடைப்பை முழுமையாக நடத்தி விட்டன. வணிகர்கள் காட்டிய ஆர்வத்தை, ஈடுபாட்டை, ஒற்றுமையை, முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக கட்சிகளும், வணிகர் சங்கங்களும் காட்டவில்லை. தங்களது செல்வாக்கை எந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் உயர்த்திக் கொள்வது என்ற போட்டி தான் நிலவுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் இதர கட்சிகள் எல்லாம், ஆளுக்கொரு திசையில் முல்லை பெரியாறு பிரச்னையில் செயல்படுகின்றன.
தி.மு.க., தனியாக, திருச்சி சிவா தலைமையிலான எம்.பி.,க்கள் குழுவினரை அனுப்பி, பிரதமரை சந்திக்க வைத்தது. அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ளதால், பிரதமர், கேரள முதல்வர், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி, எம்.பி.,க்கள் மூலம் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வழக்கம் போல், இந்த பிரச்னையிலும், "கேரளாவிற்கு மவுனம் சம்மதம்' என்ற நிலைப்பாட்டில் வாய் மூடியுள்ளது. பா.ஜ., மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. இந்த விவகாரத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள, தே.மு.தி.க., பெரும்பாலும் அறிக்கை கழகமாகவே செயல்படுகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் அவ்வப் போது, ஆர்ப்பாட்டங்களை நடத்தும் வைகோ, தற்போதும் தனியாக மறியல் போராட்டம் அறிவித்துள்ளார். வரும் 7ம் தேதி, மதுரையிலிருந்து பிரசார பயணமும், 8ம் தேதி கம்பத்தில் உண்ணாவிரதமும், 21ம் தேதி திருச்சியில், கேரளா செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டத்தையும் அவர் அறிவித்து, கட்சியை வளர்க்க முயற்சிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், லிங்கம் எம்.பி., பார்லிமென்ட் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்களுடன் சேர்ந்து பிரதமரை சந்தித்து, இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசுங்கள் என்று, இரண்டு மாநிலங்களுக்கும் "ஆமாம்' போட்ட மகிழ்ச்சியில் திரும்பி விட்டனர். பா.ம.க.,வோ, உட்கட்சி பூசலை எப்படி தீர்ப்பது என்பதில், இன்னும் முடிவு எட்டாத நிலையில், முல்லை பெரியாறு விவகாரத்தில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது. பெரிய கட்சிகளோ, தாங்கள் திரும்பிய திசைக்கு அறிக்கை, ஆர்ப்பாட்டம் என பிரிந்து கிடக்கின்றன. இப்போது வராத ஒற்றுமை, இனி எப்போது தான் வருமோ என்பதே, மில்லியன் டாலர் கேள்வி
No comments:
Post a Comment