2011ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர் டிராவிட், ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் தோனிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இந்திய விளையாட்டு நட்சத்திரங்களில் சிறந்த வீரர்களை, ஆங்கில பத்திரிகை ஒன்று தேர்வு செய்தது. இதற்காக 2011ல் வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் சச்சின், தோனி, டிராவிட், யுவராஜ், ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இரண்டு வாரங்களாக நடந்த ஓட்டெடுப்பில், துவக்கத்தில் இருந்தே டிராவிட் தான் முன்னிலையில் இருந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவர் 2011ல் பங்கேற்ற 12 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு "டுவென்டி-20 போட்டிகளில், தலா 5 சதம், அரைசதம் உட்பட மொத்தம் 1300 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசியில், 28 ஆண்டுகளுக்குப் பின் உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, தொடர் நாயகன் யுவராஜ், சச்சின் ஆகியோரை பின் தள்ளி 48 சதவீத ஓட்டுகளுடன் டிராவிட், இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி மனிதனாக போராடியது (4 டெஸ்டில், 3 சதம் உட்பட 461 ரன்கள்), இவரை சிறந்த வீரராக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டாவது இடத்தை, 20 சதவீத ஓட்டுகள் பெற்ற, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தட்டிச் சென்றார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் தோனிக்கு மூன்றாவது இடம் (14 சதவீதம்) தான் கிடைத்தது. யுவராஜ் (12%) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்த நான்கு இடங்களை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி (3%), டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (தலா 2%), குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் (1%) ஆகியோர் பெற்றனர்.
No comments:
Post a Comment