இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி முதல் இந்து சமய ஆன்மிக பிரசார யாத்திரை நடைபெற்று வருகிறது. இதன்படி 3 நாள்கள் பயணமாக இந்தப் பிரசார யாத்திரை வெள்ளிக்கிழமை குளித்தலை பகுதிக்கு வந்தது. சனிக்கிழமை நெரூரில் வழிபாட்டுடன் யாத்திரை தொடங்கியது. கரூருக்கு வந்திருந்த பிரசார யாத்திரை குறித்து கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்’’108 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நிறைவடைகிறது. யாத்திரையில் மதுவிலக்கு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு,
ஊழல் எதிர்ப்பு இயக்க ஆதரவு, சுதேசி கொள்கை ஆகியவற்றை வலியுறுத்தி பிரசுரங்களை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜனவரி 25-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பின் ஒரு பகுதியாக அந்தத் தீவில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதன்படி ஜனவரி 26-ம் தேதி கட்சியின் மாநிலச் செயலர் பவர்நாகேந்திரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்படும்’’ என்றார் அவர்.
No comments:
Post a Comment