தமிழர்களின் நாகரிகம் ஆற்றங்கரைகளில் தோன்றியது என்பதற்கு சான்றாக, காணும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இதையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், ஏரிக்கரை மூலை ரெட்டை விநாயகர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர், வீரபாண்டி அதுல்ய நாதேஸ்வரர், நாரையூர் வரதராஜப் பெருமாள் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மணம்பூண்டி கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, பஞ்ச சாசன பூஜை, பஞ்சவர்ண பூஜை, விசேஷ திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ ருத்ர மஹா அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அனைவரும் சிவபுராணம், நமச்சிவாய மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். மணலூர்பேட்டை: இதேபோல் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விரு இடங்களில் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பிடாகம், பேரங்கியூர், அத்தியூர்திருவாதி, எல்லீஸ்சத்திரம், பம்பை, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையின் கடைசி விழா என்பதால் உற்சாகத்துடன் மக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment