ரத்த தானத்தை வலியுறுத்தி, திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதியினர் ரத்த தானம் செய்தனர். புதுச்சேரி, உப்பளம் நேத்தாஜி நகரில் வசிக்கும் வேணுகோபால் மகன் தசரதன், 35; இவர் புதுச்சேரி போலீஸ் கண்காணிப்பு அலுவலகத்தில், எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆக்கனூர் பாளையத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகளான உமா, 24, என்பவருக்கும், நேற்று காலை, கடலூர், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும், திருமணக் கோலத்தில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு, வந்தனர். ரத்தவங்கி தலைவர் டாக்டர் மணி முன்னிலையில், புதுமணத் தம்பதியினர் ரத்த தானம் செய்தனர். மணமக்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்து, ரத்த தானம் வழங்கியதை, டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர். மணமக்களுடன் வந்திருந்த உறவினர்கள் இருவர், ரத்ததானம் செய்தனர்.
மணமகன் கூறியதாவது: திருமணத்திற்கு முன்பே எடுத்த முடிவின்படி, ரத்த தானம் செய்தோம். மேலும், இரு வாரத்திற்கு முன், இருவரும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்காகவும், வாரிசுகளுக்கு ரத்த சம்பந்தமாக ஏற்படும் உடல் சீர்கேட்டைத் தடுக்கும் பொருட்டும், முழு உடல் பரிசோதனை செய்து கொண்டோம்.இருவரும் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய, சென்னையிலுள்ள மோகன் பவுண்டேஷனில், பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். ரத்ததானம், உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான், இருவரும் திருமணத்தின் போதே இந்த இரண்டையும் கடைபிடித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment