ஐ.நா. மனித உரிமை சபையின் 19வது மாநாடு தொடங்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான மாபெரும் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசும், ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினரும் பெரும் பீதியடைந்துள்ளனர். 30 நாடுகள் வரை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இலங்கையின் பெரும் பீதிக்குக் காரணமாகும். கடைசி நேரத்தில் தீர்மானத்தை முறியடிக்க தேவையான வேலைகளைச் செய்ய 50க்கும் மேற்பட்ட இலங்கை அரசுக் குழு ஜெனீவாவுக்கு ஏற்கனவே வந்து முகாமிட்டுள்ளது. மொத்தம் நான்கு வாரங்களுக்கு நாட்களுக்கு இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. வாரத்திற்கு ஐந்து நாள் கூட்டம் நடைபெறும். மாநாட்டின் இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
முன்னதாக நடைபெறும் உறுப்பு நாடுகளின் உரையாற்றலில் இலங்கை சார்பில் அந்த நாட்டு அமைச்சரான மகிந்தா சமரசிங்கே பேசவுள்ளார். இந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவே இதைக் கொண்டு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்லது தென் அமெரிக்கா இதைக் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 15ம் தேதிக்குள் அனைத்துத் தீர்மானங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால் அந்தத் தேதிக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் தாக்கலாகும் என்று தெரிகிறது.
எத்தனை நாடுகள் ஆதரவு? ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதையும் தாண்டி 30 நாடுகள் வரை ஆதரவாக இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கலாம் என்பதுதான் பரபரப்பின் உச்சமாகும். அமெரிக்கா,கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மிகவும் உறுதியாக உள்ளன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் சமீபத்தில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தது. அதேபோல ஆப்பிரிக்க நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள் பல, விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவானவை என்பது நினைவிருக்கலாம்.
தீர்மானத்தைத் தடுக்க இலங்கை கடும் முயற்சி இதற்கிடையே தீர்மானத்தை தடுக்க இலங்கை கடைசி நேர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த வேலையை அங்கு சென்று முகாமிட்டுள்ள 50 பேர் கொண்ட இலங்கை குழு மேற்கொண்டுள்ளதாம். இப்போது தீர்மானம் எதுவும் வேண்டாம், மாறாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து யோசிக்கலாம் என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டதாம். ஆனால் அதை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிராகரித்து விட்டதாக தெரிகிறது.
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினர் மீது போர்க்குற்றங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்க ஆதரவுடன் கனடா கொண்டு வந்த தீர்மானமும் ஏற்கனவே ஒரு முறை தோற்கடிக்கப்பட்டது. அப்போது இந்தியா, இலங்கைக்கு தீவிர ஆதரவாக இருந்தது நினைவிருக்கலாம். இப்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் இத்தீர்மானத்தை நேரடியாகவே கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதுதான் இலங்கையை பீதிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாடு மார்ச் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஜெனீவாவில் குவிந்துள்ள இலங்கைக் கூட்டம் இலங்கை அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் உட்பட 50க்கும் மேற்பட்ட இலங்கை குழுவினர் ஜெனிவா வந்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக எந்த விஷயமும் இல்லை என்பதால் ராஜபக்சேவும் அவரது கூட்டத்தினரும் பெரும் அச்சத்தில் உள்ளனராம். தீர்மானம் நிறைவேறினால் உலக அளவில் அது இலங்கைக்கு விழும் மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும் என்பதால் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் தங்களது பார்வையை ஜெனீவா பக்கம் திருப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment